பதிவு செய்த நாள்
28
டிச
2012
03:12
திட்டமிட்டு வளர்ச்சி காணும் மிதுனராசி அன்பர்களே!
புத்தாண்டில் சனி, ராகு ராசிக்கு ஐந்தாம் இடத்தில் வருடம் முழுவதும் உள்ளனர். குரு மே 28 வரை ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்திலும், அதன்பின் ராசியிலும் அமர்ந்து செயல்படுகிறார். இதனால் வாழ்வில் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். கேதுவின் லாபஸ்தான அமர்வு மட்டுமே நல்ல பலன்களை வருடம் முழுவதும்உருவாக்கித் தரும்.அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்ற உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். கேதுவின் மூன்றாம் பார்வை ராசியில் பதிவதால் மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தை ராகுவுடன் சேர்ந்த உச்சம் பெற்ற சனி பத்தாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் பேச்சில்கடுமை உண்டாகும். நெருங்கிய உறவினர்களிடம் நிதானமாகப் பேசினால் சிரமத்திலிருந்து தப்பிக்கலாம். சந்தோஷ சூழ்நிலையை எதிர்கொள்கிற நேரத்திலும் கூட, அதை முழுமையாக அனுபவிக்க முடியாது. தம்பி, தங்கையின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவது நல்லது. வீடு, வாகனத்தில் வருட முற்பகுதியில் குருவருளால் தேவையான அபிவிருத்தி பணிகளை செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமான வகையில் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புத்திரரின் தேவைகளை எவ்வளவு நிறைவேற்றினாலும் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகும். பூர்வ சொத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். குலதெய்வ ஸ்தானத்தில் ராகு, சனி பகவானின் அமர்வு உள்ளது. இதனால் குலதெய்வ வழிபாட்டுடன் சனி, ராகுவையும் வழிபடுவதால் வாழ்வில் அதிர்ஷ்டகரமான பலன்களை பெறுவீர்கள். எதிரியால் வருகிற தொல்லையை சமாளிக்க புதிய உத்திகளைப் பயன்படுத்துவது அவசியம். உடல்நலம் அதிருப்தி அளிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்க தகுந்த ஓய்வும், தகுந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும். கடின அலைச்சலைக் குறைத்துக் கொள்வது அவசியம். நிர்ப்பந்தம் தரும் கடன் தொந்தரவைச் சமாளிக்க சொத்தின் பேரில் புதிய பணக்கடன் பெற நேரிடும். தம்பதியர் வருட முற்பகுதியில் ஒருவருக்கொருவர் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். குரு பெயர்ச்சிக்குப்பின் விட்டுக்கொடுத்து நடந்து குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுவர். இதனால் வீட்டில் நிம்மதி குடிகொள்ளும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் சீராக நிறைவேறும்.தொழிலிலும் சீரான வளர்ச்சி அமைந்திருக்கும். மூத்த சகோதரர் உங்கள் வாழ்வு சிறக்க துணைநிற்பர்.
தொழிலதிபர்கள்: தொழிலில் சீர்திருத்தங்களைப் பின்பற்றி உற்பத்தி இலக்கை அடைவீர்கள். நிர்வாகச் செலவு அதிகரித்தாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. திறமைமிகு பணியாளர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்யும் போது, லாபத்தை குறைத்து முடிக்க வேண்டிய கட்டாயச்சூழ்நிலை ஏற்படும். பாக்கியை வசூலிக்க கடும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும்.
வியாபாரிகள்: வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அக்கறை கொள்வர். சந்தைப்படுத்துவதில் புதிய உத்திகளைக் கடைபிடித்து சீரான வளர்ச்சி காண்பர். கடனை வசூலிப்பதில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். சக வியாபாரிகளின் ஒத்துழைப்பும், ஆலோசனையும் மனதிற்கு நிறைவு தரும். சரக்கு கொள்முதலில் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்பது கூடாது.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாக நடைமுறைகளை கவனமுடன் பின்பற்றுவது அவசியம். சில சமயங்களில் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். பணியிலக்கை எட்டிப்பிடிக்க கடின முயற்சி தேவைப்படும். சலுகைப்பயன்கள் படிப்படியாகவே கிடைக்கும். சக பணியாளர்களிடம் அவர்களின் குறைபாடுகளை விமர்சனம் செய்யும் விதத்தில் பேசுவது கூடாது.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்ற இயலும். ஓரளவு சலுகை கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனத்தைப் பின்பற்றுவர். முக்கிய செலவுகளுக்குச் சேமிப்பு பணம் கைகொடுக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்துவதில் தகுந்த கவனம் செலுத்துவது நல்லது. புதிய ஆர்டர் கிடைத்து ஓரளவு விற்பனை உயரும். வருமானமும் சீராகும்.
மாணவர்கள்: வருட முற்பகுதியில் படிப்பில் ஞாபகத்திறனுடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர். பிற்பகுதியில் குருவின் அமர்வால் சிறு தொய்வு ஏற்படும். கவனம். புதிய கல்வியாண்டில் மெத்தன எண்ணங்களை தவிர்த்து அக்கறையுடன் படிப்பது அவசியம். கடின உழைப்பின் மூலமே எதிர்பார்த்த தேர்ச்சி பெற இயலும். சக மாணவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு சரியாகி நட்பு வளரும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும். இதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள்: எதிரியின் கண்ணில் படாமல் விலகிச் செயல்படுவது நல்லது. தேவையற்ற பண, நேர விரயம் ஏற்படலாம் கவனம். அரசு தொடர்பான முயற்சிகளில் அதிகாரிகளை அனுசரித்து செயல்படுவது அவசியம்.
விவசாயிகள்: பயிர் விளைவிக்க இடுபொருள் கிடைப்பதில் தாமதநிலை உருவாகும். ஏற்கனவே சேமித்த பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். கால்நடை வளர்ப்பில் வருட முற்பகுதியில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் பணப்பிரச்னை அனைத்தும் தீரும்.
பரிகாரப் பாடல்:
உலகளந்த திருமாலின்
வலமார்பில் உறைபவளே!
உலகமெலாம் காத்து நிற்கும்
தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும்
அஷ்டலட்சுமித்தாயே!
செல்வ வளம் தந்து
எனை ஆதரிக்க வேணும் அம்மா!
ஜனவரி: குருவின் வக்ரத்தால் நன்மை மேலோங்கும். புதனாலும் அனுகூலமே. ஆனால், மற்ற கிரகங்களால் சுமாரான பலனே கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நிற்கும் கேது பணபிரச்னையைக் குறைப்பார். வாகன பயணத்தில் கவனம் தேவை.
பிப்ரவரி: விரய ஸ்தான குரு சுபவிரயத்தை ஏற்படுத்துவார். திருத்தல யாத்திரை சென்று வர வாய்ப்புண்டு. சிலர் வீடு கட்டும் யோகமும் உண்டாகும். உடல்நிலையில் அவ்வப்போது தொந்தரவு ஏற்பட்டு விலகும். விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.
மார்ச்: மாத பிற்பகுதியில் சூரியன் 10ல் வருவது சிறப்பானதாகும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். கடின அலைச்சலைத் தவிர்க்க முடியாது. சிலர் நோய்நொடியால் அவதிப்படுவர். கேதுவால் கையில் பணம் புரளும்.
ஏப்ரல்: பத்தாமிட புதனால் சிறப்பான பலன் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய், கேது, சூரியன் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம் நன்மையை வாரி வழங்கும். வெளிநாட்டுப் பயணத்தால் யோகம் உண்டாகும். தொழில் முயற்சி வெற்றி பெறும்.
மே: பழைய கடன்பாக்கி வசூலாகும். சுபவிஷயம் சிறப்பாக நடந்தேறும். கடன்தொல்லையும் அகலும். கையிருப்பு அதிகரிப்பதால் மனதில் மகிழ்ச்சி கூடும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் விலகுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு.
ஜூன்: விரைய ஸ்தான செவ்வாய், சூரியனால் எதிர்பாராத செலவு ஏற்படும். வாகன திருட்டு உண்டாக வாய்ப்புண்டு. மருத்துவச் செலவு அதிகரிக்கும். தொழிலில் திடீர் பிரச்னை உருவாகும். எதிர்நீச்சல் போட்டால் மட்டும் வாழ்க்கை சீராகும்.
ஜூலை: ஜென்ம குருவாக இருப்பதால் விழிப்புடன் இருப்பது நல்லது. உடல்நிலை அதிருப்தி அளிக்கும். வாகனப்பயணத்தில் நிதானம் தேவை. மனதில் கவலையும் உருவாகும். உறவினர், நண்பர்களால் தொல்லை ஏற்படும். செலவும் அதிகமாகும்.
ஆகஸ்ட்: கவலை மனதில் அதிகமாகலாம். இருந்தாலும், கேது, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் உதவியால் ஓரளவு வாழ்வில் போராடி ஜெயிக்கும் மனப்பான்மை உருவாகும். 3ல் ஆட்சி பெறும் சூரியனால் துன்பம் படிப்படியாக விலகும்.
செப்டம்பர்: சுக்கிரன், புதன், கேது போன்ற கிரகங்களால் நன்மை தொடரும். ராசிநாதன் உச்சமாக இருப்பதால் புதிதாக வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டு. படித்து முடித்து வேலை தேடுவோருக்கு வெளியூர், வெளிநாட்டில் பணி கிடைக்கும்.
அக்டோபர்: செவ்வாய் 3ல் சஞ்சரிக்கும் இக்காலம் நற்பலனை வாரிவழங்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். நிலப்பிரச்னையில் சுமூகமான தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். சாதகமான தீர்ப்பு வரும். கையில் பணப்புழக்கம் அதிகிரிக்கும்.
நவம்பர்: குரு வக்ரமாக இருப்பதால் எதிர்மறை பலன் உண்டாகும். பணம்,நகை, விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாப் பதில் அதிக கவனம் தேவை. மருத்துவச் செலவும் ஏற்படலாம். வாகனப்பயணத்திலும் மிதமான வேகம் காட்டுவது நல்லது.
டிசம்பர்: வாழ்வில் பிரச்னை பல தென்பட்டாலும் வருமானத்திற்குக் குறைவிருக்காது. குடும்பத்தேவை அனைத்தும் சீராக நிறைவேறும். மனதில் தைரியம் அதிகரிக்கும். தொழில் போட்டியைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.