30 ஆண்டுகளுக்கு பிறகு தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மஹா ஸம்ப்ரோஷணம்
பதிவு செய்த நாள்
03
நவ 2025 06:11
சிதம்பரம்: சிதம்பரத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, தில்லை கோவிந்தராஜபெருமாள் கோவில் ஸமப்ரோஷணம் இன்று நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், உலக அளவில் சிறப்பு பெற்ற நடராஜர் கோவில் வளாகத்தில், புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இது, 108 திவ்ய தேசங்களில் 41வது திவ்ய தேசமாகும். சைவ கோவிலான நடராஜர் சந்நிதியும், வைணவ கோவிலான தில்லைகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியையும், பக்தர்கள் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசிக்கலாம். இங்குள்ள மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்தில் உள்ளார். இந்நிலையில், பக்தர்கள் நீண்ட கோரிக்கையை ஏற்று, 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மஹா ஸம்ப்ரோஷணம் நடந்தது. கோவிலில், மூலவர் மற்றும் அம்மன் சன்னதிகளின் விமான கோபரம், ராஜ கோபுரங்கள், மகா மண்டபம், கருடாழ்வார் சந்நிதி உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டது. அதையடுத்து, நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் முன்பு நடனப்பந்தலில் கடந்த மாதம் 30ம் தேதி காலை, ஸம்ப்ரோஷணத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலையில் 7 கால யாக பூஜைகள் மற்றும் மகாதீபாரதனை நடந்தது. ஸம்ப்ரோஷணத்திற்காக, தலைக்காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டது. கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 8ம் கால யாகசாலை பூஜையும், புன்ய ஹோமம், நித்யஹோமம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, புனித நீர் ஊர்வலமாக கொண்டு சென்று, கோவில் விமான கலசங்களில் பட்டாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஸம்ப்ரோஷணம் நடந்தததால், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, கோவிந்தா கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர்.
|