கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே மஞ்சமேடு கிராமத்தில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர். கோட்டீஸ்வர நயினாரிரின் தென்னந்தோப்பில், 12ம் நுாற்றாண்டு கால மூன்றாம் குலோத்துங்கனின் சோழர்கால வணிகக்குழு கல்வெட்டை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது: தர்மபுரியிலிருந்து ஆந்திர மாநிலம் பூதலப்பட்டு வரை செல்லும் அதியமான் பெருவழியை ஒட்டிய மஞ்சமேட்டில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டு, எழுபத்தொன்பது நாட்டார் என்ற வணிகக்குழு கல்வெட்டாகும். பாரூர் பற்றில் உள்ள மஞ்சமாடத்தில் இருக்கும் மஞ்சமாட எம்பெருமான், பெரிய நாட்டு பெருமாளுக்கு எழுபத்தொன்பது நாட்டு பெரிய நாட்டார் கூடி, ஒவ்வொரு ஊரிலிருந்தும், தலா ஒரு பணம் வீதம் வசூலித்து கொடுத்ததை கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டின் முன்பக்கம் கஜலட்சுமி சிற்பம் மிக நுட்பமாக பெரிய மார்பகங்களோடு செதுக்கப்பட்டுள்ளது. வலது பக்க யானை கலசத்திலிருந்து நீரை ஊற்றுகிறது. இடப்பக்க யானை மலரை துாவுகிறது. அருகே கமண்டலம், தண்டம், குடை, கத்தி, சேவல், சித்திரமேழி எனப்படும் ஏர் கலப்பை, குத்துவிளக்கு போன்ற வணிக சின்னங்கள் உள்ளன. இக்கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனின், 22ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகும். 825 ஆண்டுகளுக்கு முன் மஞ்சுமாடம் என்று அழைக்கப்பட்ட ஊர், தற்போது மஞ்சமேடு என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து. 1 கி.மீ., தொலைவில் உள்ள வாடமங்கலம் பெருமாள் கோவிலைத்தான், மஞ்சுமாட எம்பெருமான் பெரியநாட்டு பெருமாள் என கல்வெட்டு குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.