பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் பந்தலூர் அருகே, பொன்னானி பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த கோவிலில் நடைபெற்ற, சப்தாகம் மற்றும் தாம்பூல பிரசன்னம் பூஜைகளின் போது, கோவிலை சுற்றி சுற்றுச்சூழல் அமைத்தால் மட்டுமே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கு நன்மை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுற்றுச்சூழல் கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று அடிக்கல் நாட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கோவில் மேல் சாந்தி சுதீஷ் சிறப்பு பூஜைகள் செய்தார். கோவில் மேலாளர் சந்தியா தலைமை வகித்தார். இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணரும், சிற்பியுமான ஹரிதாஸ் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. புனரமைப்பு குழு தலைவர் வினோத் பெருவா கூறுகையில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தங்களால் இயன்ற, பொருட்கள் மற்றும் நிதி உதவியினை வழங்கி, விஷ்ணு பகவானின் அருள் பெற்று செல்ல முன் வரவேண்டும் என்றார். தொடர்ந்து கட்டுமான பணி சிறப்பான முறையில் நடைபெற பக்தர்கள், சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் மேலாளர் தலைமையில் தலைவர், கன்வீனர் புஷ்கரன், செயலாளர் ரதீஷ், ஊட்டி பகுதியை சார்ந்த தோடர் சமுதாய தலைவர் மந்தேஸ்குமார் தலைமையிலான கிராம மக்கள் உள்ளிட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.