நிதி ஒதுக்கியும் திருப்பணிகள் துவங்காமல் சிதிலமடையும் முருகன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2025 08:11
விருதுநகர்: விருதுநகரில் சிதிலமடையும் நிலையில் உள்ள பழமையான எல்லிங்கநாயக்கன்பட்டி முருகன் கோயிலுக்கு கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணி திட்டத்தில் நிதி ஒதுக்கியும், அறநிலையத்துறை தற்போது வரை பணிகளை துவக்காமல் உள்ளது.
விருதுநகரில் செங்குன்றாபுரத்தை அடுத்து எல்லிங்கநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஹிந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான குமரன் என்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது வரகுண பாண்டியன் காலத்து கோயில் என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
திருப்புகழில் செங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் முருகோனே என முருகனை புகழ்ந்து பாடும் வரி உள்ளது. செங்குன்றாபுரத்தில வாழ்கிறவரும், வாலிபன் என அழைக்கப்படுவருமாகிய முருகபெருமானே என்று அதற்கு பொருள்படும். விளக்கவுரையில் செங்குன்றாபுரம் குமரகுளம் கண்மாய் கரையில் குமரனாக வீற்றிருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது கூடுதல் தகவல். செங்குன்றாபுரம் அருகில் இந்த முருகன் கோயில் மட்டுமே உள்ளது. மேலும் கண்மாய் கரையிலும் இந்த முருகன் கோயில் தான் உள்ளது.ஆதலால் இக்கோயில் தான் திருப்புகழில் கூறப்பட்ட கோயில் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். இக்கோயிலில் கல்வெட்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொல்லியல் ஆய்வறிஞர்கள் கோயிலை ஆய்வு செய்துள்ளனர். கோயில் பழமையான கல் கட்டடம் என்பதால் விமானம், சுற்றுச்சுவர் ஆகியவை சேதமடைந்துள்ளன. மேலும் வளாகத்திற்குள் மரங்கள் அதிகளவில் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகின்றன. ஆகவே அறநிலையத்துறையினர் பழமையான இந்த முருகன் கோயிலை பராமரித்து புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் இதற்கு ரூ.ஒன்றரை கோடிக்கு திட்ட மதிப்பீடு வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. அதே நேரம் கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகள் திட்டத்தில் ரூ.2.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் கோயிலின் வெளிப்புற தளம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக கிராவல் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இது 2024– 25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி. இன்னும் பணிகளை முடிக்காமல் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தாமதம் செய்து வருகின்றனர். எனவே விரைந்து திருப்பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.