பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து சொல்லி பிளக்ஸ் வைத்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2025 11:11
அவிநாசி; மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம்கள் இணைந்து சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களை வரவேற்று வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.
சேவூரில் 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. இதற்காக மத ஒற்றுமையும், மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று வாழ்த்து பேனர் முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் திருப்பணி குழுவினர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை பள்ளிவாசல் ஜமாத்தாரர்களிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்கம், மனித நேயம் ஓங்க அனைவரும் பள்ளிவாசலில் துவா செய்தனர். சேவூர் ஏரிமேடு சின்ன பள்ளிவாசல் மற்றும் வடக்கு வீதி பெரிய பள்ளிவாசல் ஆகிய இஸ்லாமிய சகோதரர்கள் இணைந்து கும்பாபிஷேக விழா சிறக்கவும், பக்தர்களை வரவேற்றும் வாழ்த்து சொல்லி கைகாட்டி ரவுண்டானா பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வாழ்த்து சொல்லி,மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம்கள் பிளக்ஸ் பேனர் வைத்த செயல் பக்தர்களை நெகிழ செய்துள்ளது.