குன்னுார்: ஜெகதளா ஹெத்தையம்மன், திருவிழாவின் ஒருபகுதியாக, நடைபயணம் மேற்கொண்டுள்ள ஹெத்தைக்காரர்களுக்கு தும்மனட்டி கிராமத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழாவை, 48 நாட்கள் கொண்டாடுகின்றனர். ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு, காரக்கொரை, ஓதனட்டி, மஞ்சிதளா, பேரட்டி, மல்லிக் கொரை, பெரிய பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய, 8 ஹட்டிகளின், ஹெத்தை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இந்த ஹட்டிகளை சேர்ந்தவர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு தாய் வீடு என அழைக்கப்படும் கொதுமுடி கிராமத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இந்த குழுவினர் தும்மனட்டி கிராமத்தை அடைந்தனர். ஊர் தலைவர் கண்ணன் தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தும்மனட்டி சத்ய சாயி சேவா சமிதி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஹெத்தை அம்மன் பாடல்கள், பாபா பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து பூஜைகள் நாராயண சேவை நடந்தது. தும்மனட்டி மாரியம்மன் கோவிலில் ஆடல் பாடல்களுடன், பஜனை அருள்வாக்கு கூறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மடித்தொரை கிராமத்திற்கு சென்ற ஹெத்தைக்காரர்கள் அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ஜன., 9ல் கோவிலில், குண்டம் இறங்குகின்றனர். 12ம் தேதி ஜெகதளாவில் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.