பதிவு செய்த நாள்
02
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் உள்பட, சுற்றுவட்டாரத்திலுள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நேற்று நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, தஞ்சை பெரியகோவிலில் நேற்றுக்காலை, ஐந்து மணிக்கு சிறப்பு பூஜை துவங்கியது. இதைத்தொடர்ந்து காலை, 8.30 மணிக்கு காலை சந்தி பூஜை, மதியம், 12.30 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை, ஐந்து மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு, ஒன்பது மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. புத்தாண்டு சிறப்பு அபிஷேக பூஜையில் பிரகதீஸ்வரருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்த அபிஷேகங்கள் நடந்தன. தஞ்சை வக்கீல்கள் சங்கத்தினர் சார்பிலும், பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வழிபாடு நடத்தப்பட்டது. ஏற்பாட்டை, தஞ்சை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் செயல் அலுவலர் அரவிந்தன் உள்பட அலுவலர்கள் செய்திருந்தனர். தஞ்சை பெரியகோவிலுக்கு வழக்கமான தினங்களில் காலை முதல், இரவு வரை, வெளியூர், வெளிமாநில பக்தர்கள், 10 ஆயிரம் பேர் வருகை தருவர். ஆனால், நேற்று புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால், குடும்பத்துடன் வழக்கத்தை விட, 25 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக என, 35 ஆயிரம் பக்தர்கள் பெரியகோவிலில் நடந்த சிறப்பு பூஜை, வழிபாட்டில் பங்கேற்றனர். இதனால், காலை முதல் மாலை வரை பெரியகோவிலில் பக்தர்கள் கூட்டம் களைகட்டி காணப்பட்டது. இதேபோல, தஞ்சை சுற்றிலும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், கோதண்டராமர் கோவில், கைலாசநாதர் கோவில், மகர்நோன்பு சாவடி பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில், மூலை அனுமார் கோவில், பூக்கார தெரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில், திட்டை வசிஸ்டேஷ்வரர் கோவில் உள்பட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.