பரமக்குடி அருகே பழமை வாய்ந்த கள்ளிக்கோட்டை சிவன் கோயில் புனரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2025 05:12
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டை முத்தீஸ்வரர் கோயில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நிலையில், தொல்லியல் துறையினர் பார்வையிட்டும் மீட்டெடுக்கப்படாமல் உள்ளது.
பரமக்குடியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கள்ளிக்கோட்டை கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மீனாட்சி தனி சன்னதியில் இருந்துள்ளார். இக்கோயிலில் உள்ள சுவாமியை பானாசுரன் என்ற அசுரன் வழிபட்டதாக கூறப்படும் நிலையில், பல ஏக்கர் நிலங்கள் கோயிலுக்கு சொந்தமாக இருந்துள்ளது. மேலும் சேதுபதி மன்னர்கள் காலத்தில் மதுரை, நயினார்கோவில் என செல்வதற்கு வசதியாக அருகில் கோட்டையை உருவாக்கி அங்கு தங்கி ஓய்வெடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதன்படி கோயில் அருகில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றும் உள்ளது. தொடர்ந்து தொல்லியல் ஆய்வாளர்கள் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு இங்கு கண்டெடுத்துள்ளனர். மேலும் சைவ மதங்களில் துறவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வந்துள்ள ஆதாரங்களும் கிடைக்கப்பட்டுள்ளன என, தொல்லியல் ஆய்வில் நிறுவனத் தலைவர் ராஜகுரு தெரிவித்துள்ளார்.
இத்தகைய பெருமை வாய்ந்த சிவன் கோயில் பின்புறம், யோக நரசிம்மர் காலில் பட்டயத்துடன் நான்கு கரத்துடன் வீற்றிருக்கும் காட்சி அதிசயத்தக்க வகையில் உள்ளது. கோயிலை புனரமைக்க பக்தர்களுடன், தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இச்சூழலில் அறநிலைய துறையினரால், 2024ம் ஆண்டு தொல்லியல் துறையினர் பார்வையிட்டு கற்களுக்கு நம்பர் போடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் சிதிலம் அடைந்த கோயிலுக்கு அருகில் சிறிய அறையை உருவாக்கி அனைத்து சுவாமிகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆகவே பாண்டியர், சோழர் கால கோயில்களை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.