பதிவு செய்த நாள்
04
பிப்
2011
04:02
அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று <உன் தாய் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டாயா? உடனே அவற்றை என்னிடம் கொடு. இல்லாவிட்டால், உன்னை அடித்தே கொன்றுவிடுவேன், என்று மிரட்டினான் காமந்தன். இவன் குடும்பினியின் கணவன். உலகத்திலுள்ள அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் சொந்தக்காரன். குறிப்பாக வேசியர் சுகத்தில் திளைத்துக் கிடந்தவன். குடும்பினி அழுதாள். அடி உக்கிரமாக விழவே, வேறு வழியின்றி, பானைக்குள் ஒளித்து வைத்திருந்த நகைகளைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். என்ன தைரியமிருந்தால், வீட்டுக்குள்ளேயே ஒளித்து வைத்து விட்டு இவ்வளவு நேரம் காக்க வைத்திருப்பாய். அங்கே, என் காதலி அல்லிராணி என் வரவுக்காக காத்துக் கிடப்பாள். அவள் உன்னைப் போல அழுமூஞ்சியல்ல. அழகே, வடிவானவள். சோகத்திலும் புன்னகை சிந்துபவள். என் இதயராணியான அவளுக்கே இந்த நகைகள் இனி சொந்தம், என்றவன், தன்னை காக்க வைத்ததற்காக மீண்டும் அவளை தன் கோபம் தீர உதைத்து விட்டு கிளம்பி விட்டான். குடும்பினிக்கு துயரம் தாங்க முடியவில்லை. இனியும் இந்த பாவியுடன் வாழ்ந்தால், கட்டிய தாலியையும் பறித்து விடுவான். இவன் நமக்கு இனி பொட்டு வைக்க மட்டுமே பயன்படும் ஒரு கணவன். இன்னும் கொஞ்ச நாளில் நம் குழந்தைகளையும் இம்சை செய்ய ஆரம்பித்து விடுவான். ஆண்டவன் எனக்கு ஏழு மகன்களையும், ஐந்து பெண்களையும் தந்திருக்கிறான். கடைசிகாலத்தில், இவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியத்தில் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறி, தாய் வீட்டில் போய் அடைக்கலமாகி விட்டாள். தாய் வீட்டில் நல்ல வசதியுண்டு. தன் பேரன், பேத்திகள் சகிதமாக குடும்பினியின் பெற்றோர் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொண்டனர். கணவனைப் பிரிந்து வந்தது அவர்களுக்கு வருத்தத்தைத் தந்தாலும், தன் மகளின் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மேலிட அங்கேயே அவள் தங்கிவிட்டாள்.
அல்லிராணியின் வீட்டுக்குச் சென்ற காமந்தன், அவளோடு ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருந்தான். நீ கொண்டு வந்த குறைந்த நகைக்கு, இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது. மேலும், ஏதாவது கொண்டு வா, எனச் சொல்லி விரட்டி விட்டாள் அல்லி. வீட்டில் இன்னும் ஏதாவது கிடைக்குமென நம்பி வந்த காமந்தனுக்கு அதிர்ச்சி. வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு செம்பு கூட இல்லை. பக்கத்தில் விசாரித்தான். நீ செய்த கொடுமைக்கு எவள் தான் உன்னோடு வாழ்க்கை நடத்துவாள். அவள் பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள், என்றனர். காமந்தன் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.உழைத்து பொருள் சேர்க்க தன்னால் முடியாது. ஆனால், கொள்ளையடித்தால் என்ன என்று தோன்றியது. பெரிய கடாமீசை ஒன்றை வளர்த்தான். இடுப்பில் பிச்சுவா கத்தியை செருகிக் கொண்டான். இரவு நேரங்களில், சாலைகளில் போவோர் வருவோரை மிரட்டி கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டான். தர மறுத்தோரை கொலையும் செய்தான். காலப்போக்கில், பணத்தை தந்தவர்களையும் கொலை செய்வதை பொழுது போக்காக கொண்டு விட்டான். பணம் மிக அதிகமாக கொட்டவே, அல்லியை மட்டுமின்றி, இன்னும் பல பெண்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, எந்நேரமும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தான். பணம் கிடைக்காத நாட்களில், காட்டு வழியே செல்லும் தம்பதிகளை மறித்து, கணவனைக் கொன்று விட்டு, அவனுடைய மனைவியைக் கெடுத்து கொன்று விடுவான். அவன் செய்யாத பாவமே இல்லை. ஒருநாள், உச்சகட்டமாக ஒரு பாவம் செய்தான். ஒரு பிராமண இளைஞன் அவனிடம் சிக்கினான். அவனிடம் இருந்த பொருளைக் கேட்டதும் பயந்து போன இளைஞன் கொடுத்து விட்டான். கத்தியை எடுத்து அவனைக் கொல்லப் பாய்ந்த போது, அந்த இளைஞன் கதறினான்.திருடனே! என்னைக் கொன்று விடாதே. எனக்கு இரண்டு மனைவிகள், மூத்தவளுக்கு குழந்தை இல்லை. இரண்டாம் மனைவியோ இன்னும் வயதுக்கு வராதவள். அவள் வயதுக்கு வந்த பின்னர், பித்ருகடன் செய்ய ஒரு ஆண்பிள்ளையை பெற்ற பின்பே மடிய வேண்டும் என நினைப்பவன் நான். ஆண் குழந்தை இல்லாதவனுக்கு நற்கதி கிடைக்காது என்பதை நீ அறிவாய். பொருளைத் தான் கொடுத்து விட்டேனே. என்னை விட்டுவிடு, என கெஞ்சினான். ஆனால், எதையும் காதில் கேட்காமல் அவனைக் கொன்று விட்டான் காமந்தன்.
பிராமணனைக் கொல்வது பெரும் பாவம். இறந்து போன பிராமணன், பிரம்மஹத்தி என்ற பூதமாக மாறி அவனைப் பீடித்தான். அன்றுமுதல், காமந்தனுக்கு எதுவுமே சரிவர நடக்கவில்லை. உடலுக்கு முடியாமல் போனது. பலமிழந்து தவித்தான். தன் நிலையை தன் சகா ஒருவனிடம் சொல்லி, தன் மனைவியை அழைத்து வரும்படி கூறினான். அவன், அங்கே போய் அதனைச் சொல்ல, பாவம் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். நான், அவனோடு வாழ முடியாது என சொல்லிவிடு, என குடும்பினி சொல்லிட்டாள். சகா இதை காமந்தனிடம் சொன்னதும், நொந்து போன அவனது வாழ்விலும் திருப்பம் வந்தது. சில பிராமணர்கள் ஒருநாள் காட்டு வழியே வந்தனர். நோயின் வேதனை தாளாமல் முனகிக் கொண்டே, அவர்களை அவன் அணுகினான். அவர்களை வணங்கி, தன்னிடமிருந்த பொருட்களை தானம் செய்தான். ஊருக்குள் இருக்கும் மற்ற பிராமணர்களையும் அனுப்பி வைக்க கூறினான். விஷயமறியாத அந்த வெளியூர் பிராமணர்கள், காமந்தனின் ஊரைச் சேர்ந்தவர்களிடம் இது பற்றி கூறினர். உள்ளூர் பிராமணர்களும் தர்மம் பெறுவதற்காக வந்தபோது தான், தர்மம் செய்தவன் கொள்ளைக்காரன் காமந்தன் என்பது புரிய வந்தது. உன்னிடம் தர்மம் பெற்றால் பாவம். தானத்தைச் செய்ய தகுதியுள்ளவர்களிடம் தான் தானம் பெற வேண்டும். உனக்கேது அந்தத்தகுதி, நீ கொலைகாரன், கொள்ளைக்காரன், பெண்பித்தன், எனச் சொல்லிவிட்டு போய்விட்டனர். இந்த சம்பவம் காமந்தனை மிகவும் பாதித்தது. அப்போது, காட்டில் ஒரு தபஸ்வியை அவன் சந்தித்து தன் கதையைச் சொல்லி அழுதான். மகனே! ஊழ்வினையின் படியே இவையெல்லாம் நிகழ்ந்தன. உன் பாவத்திற்கு பரிகாரம் சொல்கிறேன் கேள்! இந்த காட்டில் பாழடைந்து போன விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அதைப் புதுப்பித்து கட்டு. உன் பாவத்தின் பெரும்பகுதி குறைந்து விடும், என்றார். தன்னிடமிருந்த பொருளைக் கொண்டு தபஸ்வி சொன்னதைப் போலவே கோயிலைக் கட்டி முடித்தான் காமந்தன். சில ஆண்டுகளுக்கு பிறகு அவன் இறந்து போனான்.