பதிவு செய்த நாள்
04
பிப்
2011
04:02
அந்த தபஸ்வியின் பெயர் சிவனன். பிருகு மகரிஷிக்கும் புலோமைக்கும் பிறந்த செல்வ புத்திரர். அவர், காட்டில் வேதனையுடன் திரிந்த அரச தம்பதியரை பார்த்தார். அழகில் ஊர்வசியையும், ரம்பையையும் கலந்து வடித்தது போன்ற சுதைமையையும், அவளுடன் குரூர வடிவில் இருந்த சோமகாந்தனையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். பரிதாப நிலையில் இருந்த அவர்களை நோக்கி வந்த அந்த இளைஞரிடம், மகனே! நீ யாரப்பா? அழகுத் திருவுருவே! உன்னைப் பெற்றவள் நிச்சயம் புண்ணியவதியாகத் தான் இருக்க வேண்டும். உன் கண்களில் அன்பு பொழிகிறது. இளமை சுகங்களை சுவாசிக்க வேண்டிய இந்த பருவத்தில், தபசு கோலம் பூணக் காரணம் என்ன? என பரிவுடன் கேட்டாள் சுதைமை. அவளது பேச்சில் இருந்த தாய்மை கனிவை உணர்ந்த சிவனன், அம்மா! நான் பிருகு புத்திரன். அருகிலுள்ள என் தந்தையின் ஆஸ்ரமத்தில் பெற்றோருக்கு பணிவிடை செய்து வருகிறேன். தாங்கள் யார்? ஏன் இந்த மனிதருடன் இருக்கிறீர்கள்? என தொழுநோய் பிடித்த சோமகாந்தனை நோக்கி கையை நீட்டினான். அவள் நடந்த கதையை கண்ணீருடன் சொன்னாள். சிவனன் அவர்களுக்கு ஆறுதல் மொழி சொல்லி விட்டு புறப்பட்டார். தந்தை பிருகுவிடம் இதுபற்றி சொன்னார். மகனே! ஆதரவற்றவர்களை ஆதரிக்க வேண்டியது நமது கடமையல்லவா? அவர்களை உடனே அழைத்து வா! வேண்டியதைச் செய்வோம், என்று பிருகு கூறவும், சிவனன் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் ஆஸ்ரமத்துக்கு சென்றார். அந்த ஆஸ்ரமத்தில் எதிரும் எதிருமான மிருகங்களும், பறவைகளும், பூச்சி, புழுக்களும் கூட ஒன்றுபட்டு இருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தார். புலியும் மானும் ஒன்றாக விளையாடின. சிங்க குட்டிகளுக்கு பசுக்கள் பால் கொடுத்தன. பாம்புகளும், மயில்களும் ஒட்டி உ<றவாடின. இந்த அதிசயங்களை எல்லாம் ரசித்தபடியே, அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்தனர். பிருகு முனிவரின் தேஜஸான வடிவைப் பார்த்தவுடனேயே, சோமகாந்தன் தன் வியாதியே தீர்ந்து விட்டது போல் உணர்ந்தான்.
ஐயனே! இந்த நோய் வந்ததற்காக நான் வருந்தியது என்னவோ உண்மை தான். ஆனால், இது மட்டும் வராதிருந்தால், என் வாழ்வில் உங்களைப் போன்ற மகரிஷியைச் சந்திக்கும் பாக்கியத்தை இழந்திருப்பேன், என் உள்ளத்தில் இருந்து எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளாகக் கொட்டினான். சுதைமை இன்னும் உணர்ச்சி வசப்பட்டாள். மாமுனிவரே! உங்களைப் பார்த்ததுமே இவரது வியாதி தீர்வதற்கான நேரம் வந்துவிட்டதை உறுதியாக நம்புகிறேன். எனக்கு மாங்கல்ய பிச்சை தர வேண்டும். இவர் மீண்டும் தன்னிலை பெற வேண்டும், என்று அழுதாள். பிருகு முனிவர் அவளை ஆசிர்வதித்தார். மகளே! நல்ல நேரம் வரும் போது, ஒவ்வொரு மனிதனும், வர வேண்டிய இடத்திற்கு வந்து விடுகிறான். உனக்கும் நல்ல நேரம், அதனால் தான் இங்கு வந்தாய். கவலை கொள்ளாதே. உன் பர்த்தாவின் முகத்தைப் பார்த்ததுமே, அவனுக்கு பூர்வஜென்ம கருமத்தால் ஏற்பட்டுள்ள இந்த வியாதியைப் புரிந்து கொண்டேன். இதைக் குணப்படுத்துவது எளிது. நீங்கள் இங்கேயே தங்குங்கள். நான் விநாயகரின் சரிதத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த சரிதத்தைக் கேட்பவர்களுக்கு எல்லா நலமும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும். இழந்த செல்வம், ஆட்சி, அதிகாரம் அத்தனையும் திரும்பக் கிடைக்கும், என்றார். பின்னர் அவர்களை ஆஸ்ரமத்தில் தங்க வைத்து, உணவு, உடை முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்தார். அன்றிரவில், சோமகாந்தனின் மனம் பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தது. இந்த முனிவர் எனக்கு நோய் குணமாகி விடும் என்கிறார். இவரிடம் மூலிகையோ மருந்துகளோ இல்லை. விநாயகரின் சரிதம் கேட்டாலே நோய் நீங்கும் என்கிறார். அதெப்படி சாத்தியமாகும்? நோயாளிகளுக்கு மருந்து வேண்டாமா? இப்படி சந்தேகித்தபடியே தூங்கிப் போனான். மறுநாள் காலையில் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்ததும், எங்கிருந்தோ பல பறவைகள் பறந்து வந்தன. சோமகாந்தனை அவை பிடுங்கி எடுத்தன. ஏற்கனவே தொழுநோயால் நைந்து தொங்கிய அவனது உடலில் இருந்து ரத்தமும் சீழும் கொட்டியது. வலி தாளாமல் அவன் அலறினான். மாமுனிவரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே, பிருகுவின் காலில் விழுந்தான்.
மகனே! நீ என்னை நம்பாமல் இருக்கலாம். ஆனால், முழு முதற்கடவுளான விநாயகரையே நேற்றிரவு சந்தேகித்தாயே! அதனால் தான் இப்படி நிகழ்கிறது, என்று முனிவர் சொன்னதும், தன் மனதில் நினைத்தது இவருக்கு தெரிகிறது என்றால், இவரின் தவசக்திக்கு அழிவேது என நினைத்தவன். மகா தபஸ்வி! இந்த அறிவிலியை மன்னியுங்கள். அறியாமல் செய்த பிழைக்காக வருந்துகிறேன். இந்த பறவைகளிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள். வலி உயிர் போகிறது, என்றான். அவன் கதறுவதைக் கேட்டு, சுதைமை ஓடி வந்தாள். முனிவரே! தங்களையே அடைக்கலமென நாடி வந்த எங்களுக்கு உங்கள் இல்லத்தில் ஒரு சோதனை என்றால், நீங்கள் தானே காக்க வேண்டும். என் பர்த்தாவுக்கு ஏதாவது ஆகுமென்றால், அவரது உயிர் பிரியும் முன்பே என் உயிர் தானாக போய் விடும், என முனிவரின் காலைப் பிடித்து கெஞ்சினாள். அறியாமல் தவறு செய்த மன்னனை மன்னிக்க வேண்டும் என சீடர்களும் கெஞ்சினர். அனைவரது கோரிக்கையையும் ஏற்ற பிருகு முனிவர், அந்த பறவைகளை தனது ஒரே சப்தத்தில் விரட்டினார். தனது கமண்டலத்தில் இருந்த புனித நீரை சோமகாந்தன் மீது தெளித்தார். அப்போது பேரரவம் எழுந்தது. அதிபயங்கர சிரிப்பொலிவுடன், சோமகாந்தனின் உடலில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. பிருகுவைத் தவிர எல்லாரும் நடுங்கினர்.யார் நீ? என அதட்டலுடன் கேட்டார் பிருகு.