மஹாபாரதத்துடன் தொடர்புடைய கவுரவ குந்தா மலை
பதிவு செய்த நாள்
18
டிச 2025 11:12
சிக்கபல்லாபூர் மாவட்டம் என்றால், முதலில் நம் நினைவுக்கு வருவது நந்தி மலை தான். அதன் பின், ஸ்கந்தகிரி, ஆவல பெட்டா, குடிபண்டே போன்ற மலை பகுதிகள். இந்த மாவட்டத்தின் ஹரிஹரா கிராமத்தில் இரு மலைகள் சேர்ந்து இருப்பதால், கவுரவ குந்தா மலை என்றும், பாண்டவர் மலை என்றும் அழைக்கின்றனர். பாண்டவர்கள் தங்கள் வனவாச காலத்தில் இந்த மலைகளில் தியானம் செய்ததாகவும், அதனால் ஆன்மிகம் தளைத்ததாகவும் நம்பப்படுகிறது. உதயம், அஸ்தமனம் இதுபோன்று, கவுரவர்கள் குரு வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கவுரவ மலை என்றும் அழைக்கின்றனர். இம்மலையில் சிவன் கோவில் அமைந்து உள்ளது. இம்மலையின் சிறப்பு என்னவென்றால், கோவில் அருகிலும், மலைப்பகுதியிலும் முகாம் அமைத்து தங்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. ஒரே இடத்தில் சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்த்து ரசிக்கலாம். மலை அடிவாரத்தில் ஹரிஹரா தெப்பக்குளம் உள்ளது. இதன் அருகில் சிறிய சிமென்ட் குடிநீர் தொட்டி உள்ளது. இங்கிருந்து மலையேற்றத்தை துவக்கலாம். சிறிது துாரம் நடந்து சென்றால், சிவன் கோவிலுக்கு செல்லும் பாதை காணப்படும். கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக பாறையை உடைத்து, படிக்கட்டு அமைத்து உள்ளனர். செல்லும் வழியில் பட்டாம்பூச்சிகள், பல்லிகள், பூச்சிகளை பார்த்து கொண்டே செல்லலாம். மலை ஏறும் போது வலதுபுறம் பார்த்தால், அழகிய ஹரிஹரா கிராமம் தெரியும். படிப்படியாக ஏறி, சிவன் கோவிலை அடையலாம். அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். இதற்கு மேல் செல்ல விரும்புவோர், செல்லலாம். மழை காலத்தில் செல்வதை தவிர்க்கலாம். பாறைகளில் ஏறும் போது ஜாக்கிரதையாக ஏறி செல்ல வேண்டும். 40 முதல் 50 நிமிடம் மலை உச்சிக்கு செல்ல இரண்டு பாதைகள் காணப்படும். இதில், வலதுபுறம் பாதையை தேர்வு செய்தால், பயணம் சுலபமாக இருக்கும். பாதைகள் குறித்து பாறைகளில் அம்பு குறியிட்டு காட்டப்பட்டிருக்கும். மலை அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்ல 40 முதல் 50 நிமிடங்கள் ஆகும். இந்த மலையில் இருந்தவாறே சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்கலாம். சூரியன் உதயத்தை பார்க்க விரும்புவோர் அதற்கேற்றவாறு பயண திட்டத்தை அமைத்து கொள்ளலாம். பெங்களூரில் இருந்து 75 கி.மீ., துாரத்தில் உள்ள இந்த கிராமத்துக்கு இரு சக்கர வாகனம், கார்களில் செல்லலாம். மழை காலத்துக்கு முன்னரும், கோடை காலத்திலும் மலை ஏற்றம் சிறந்தது. மழை காலத்தில் மழை கோட்டுடனும், கோடை காலத்தில் தொப்பி, கூலிங் கிளாஸ், சன் கிரீம் போன்றவற்றுடனும் செல்வது நல்லது. பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், சிக்கபல்லாபூர் பஸ் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 6 கி.மீ., துாரத்தில் உள்ள ஹரிஹரா கிராமத்திற்கு பஸ்கள் இல்லாததால், ஷேர் ஆட்டோ அல்லது தனி ஆட்டோவில் செல்ல வேண்டும்.
|