சபரிமலையில் டிச.27-ல் மண்டல பூஜை; தங்க அங்கி இன்று புறப்படுகிறது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2025 10:12
சபரிமலை: சபரிமலையில் டிச. 27ல் நடைபெறும் மண்டல பூஜைக்காக தங்க அங்கி பவனி இன்று ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் கடந்த நவ., 17- தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச., 27ல் மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 10:10 முதல் 11:30 க்குள் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும் என்று தந்திரி மகேஷ் மோகனரரு கூறியுள்ளார். இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து இன்று அதிகாலை தங்க அங்கி பவனி புறப்படுகிறது.
சபரிமலை மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் பவனியாக வந்த பின் டிச.,26 மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடையும். இங்கிருந்து தலைசுமையாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டு அன்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவு தங்க அங்கி அகற்றப்படும். மீண்டும் மறுநாள் காலை மண்டலபூஜையின்போது தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜை நடக்கும். இந்தத் தங்க அங்கி மறைந்த திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியதாகும். 27 - ம் தேதி மண்டல பூஜை முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மகர விளக்கு கால பூஜைகளுக்காக 30- ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.