திருச்செந்தூர் கோயில் டிசம்பர் வருவாய்: ரூ.2 கோடியைத் தாண்டியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2013 10:01
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த டிசம்பர் மாத வருவாய் ரூ.2.50 கோடியைத் தாண்டியது. மேலும் இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி ஒரு நாள் தரிசன கட்டணம் மூலம் ரூ.17 லட்சத்து 64 ஆயிரத்து 500 ரூபாய் கிடைத்தது. கோயில் வருமானம் அதிகரித்துள்ளதாக தக்கார் தெரிவித்தள்ளார். இது குறித்து தக்கார் கோட்டை மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதல்வர் ஜெ., உத்தரவுப்படி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. இதனால் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வருவாயும் அதிகரித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பான ஜனவரி 1ம் தேதி ஒரு நாள் தரிசனம் கட்டணம் மூலம் வருவாயக் கிடைத்துள்ளது. இது கடந்த 2012ம் ஆண்டு ஆங்கில வருடப்பிறப்பு வருவாயை விட 4,35,850 ரூபாய் கூடுதலாகும். கடந்த 2012 டிசம்பர் 1 முதல் 31-ம் தேதி வரை திருக்கோவிலில் மணியடி டிக்கெட் மூலம் ரூ 1 கோடியே 13 லட்சத்து 42 ஆயிரத்து 950ம், தங்கும் விடுதிகள் மூலம் ரூ 36 லட்சத்து 91 ஆயிரத்து 41-ம், உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 18 ஆயிரத்து 991-ம் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 52 ஆயிரத்து 982 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இது கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடும் போது 66,37,590 ரூபாய் கூடுதலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.