பதிவு செய்த நாள்
04
ஜன
2013
10:01
பழநி: தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்ய போதிய டப்பாக்கள் இல்லாததால் பழனி கோயிலில் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது. தற்போது பெங்களூரு, வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாக டப்பாக்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசம் திருவிழாவையொட்டி பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் மலைக்கோயிலில் பஞ்சாமிர்த தேவையும் அதிகரித்துள்ளது. பஞ்சாமிர்த டப்பாக்களை வழங்கிவரும் ஒப்பந்தாரர் தற்போது கூடுதலாக, தயார் செய்து தரமுடியவில்லை. இதனால், தயார் செய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
பெங்களூருரில் கொள்முதல்: இதையடுத்து, பழநி தேவஸ்தானம் முதல்கட்ட தேவையை பூர்த்திசெய்வதற்காக கோவை, மதுரையிலிருந்து ஒரு லட்சம் பஞ்சாமிர்த டப்பாக்கள் வாங்கியுள்ளது. தற்போது பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் சீராக கிடைக்கிறது. தொடர்ந்து தட்டுபாடியின்றி பக்தர்களுக்கு வழங்க பெங்களூருவிலிருந்து கூடுதலாக 10 லட்சம் டப்பாக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பணிகள் வேகமாக நடக்கிறது. மலைக்கோயில், கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள தேவஸ்தான கடைகளில் தினமும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட (அரைக்கிலோ எடையுள்ள) பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகிறது. பழநிகோயிலுக்கு பஞ்சாமிர்த விற்பனை மூலம் ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், தைப்பூசத் திருவிழா, ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு சுத்தமான முறையில் தயாரித்து அரைக்கிலோ ரூ.25, ரூ.30(டின்) விற்கப்படுகிறது, என்றார்.