தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2025 06:12
ராமேஸ்வரம்: தொடர் விடுமுறையால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வாகனங்களில் வந்தனர். இவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு பிறகு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். கோயில் 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி கோயில் மேல வாசல் வரை ஒருவழி பாதையாக போக்குவரத்து போலீசார் மாற்றியிருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையில் பார்க்கிங் வசதி இல்லாததால் வாகனங்களை சாலை ஓரத்தில் தாறுமாறாக நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.