ஆன்மீகம் எங்கு குறைகிறதோ அங்கு பண்பு குறைகிறது
பதிவு செய்த நாள்
02
ஜன 2026 03:01
கோவை: ‘‘ஆன்மீகம் எங்கு குறைகிறதோ அங்கு பண்பு, தொண்டு குறைகிறது,’’ என, பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று துவங்கியது. அருளாளர் சேக்கிழார் எனும் தலைப்பில் பாரதி பாஸ்கர் பேசியதாவது:தொண்டு செய்யும்போது சோர்வு வரும். ஆனால், அந்த தொண்டு பலருக்கு சேரக்கூடும் என தெரியும்போது அது நீங்கும். தொண்டு செய்வோரை வணங்கும் பாக்கியம் நமக்கு கிடைப்பதால், நம்மை நாமே வணங்க வேண்டும். சேக்கிழாரின் முதல் பாடலே நம்மை இறையருளை அடையச் செய்யும். நுால் வடிவில் கிடைத்த ஞானப்பால் தான் பெரிய புராணம். தீமைகளை அகற்ற முடியாது. ஆனால், அதை அடக்கலாம். மதத்தின் பின்னால் உள்ளதை அறிந்தால் ஞானம் வரும். பலருக்கும் பதவியை விடுவது எளிதல்ல. ஆன்மீகம் எங்கு குறைகிறதோ அங்கு பண்பு, தொண்டு குறைகிறது. கடவுளின் பாதத்தில் மனதை செலுத்தியவர் எது வந்தாலும், ஒரே மாதிரி இருப்பார். உடல் உழைப்பு இல்லாமல் நாம் செய்யும் காரியம் தொண்டாகாது. இந்து மதம் எதையும் பிரித்து வைக்காது. அனைத்தையும் தனக்குள்ளே கொண்டது. நான் இதை செய்தேன் என, வெளியில் சொல்லாத போது தான், தொண்டு முழுமை அடைகிறது.இவ்வாறு, அவர் பேசினார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், பிரம்மகுமாரி கோதை தினகரன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
|