அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகும்.காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படும் இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன பெருவிழாவை முன்னிட்டு ஆடல்வல்லானான நடராஜா பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்று ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25ம் தேதி ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் திருவாதிரை நாச்சியார் காப்பு கட்டுடன் துவங்கியது. நாள்தோறும் திருவெம்பாவை உற்சவத்துடன் மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெற்று வந்தது.
நேற்று திருவாதிரை அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மாங்கல்ய நோன்பு பூஜை நடைபெற்றது. இன்று ஆருத்ரா தரிசன நாளை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு விபூதி, சந்தனாதி தைலம்,நெய்,பஞ்சகவ்யம்,நெல்லி பொடி, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வ பொடி,பஞ்சாமிர்தம், மாதுளை, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா பழச்சாறுகள் உள்ளிட்ட 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் நான்கு வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க,கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் ஓதுவா மூர்த்திகள் தேவாரப் பாடல்கள் பாட அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் சாமி பட்டி சுற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் நான்கு ரத திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் கொட்டும் பணியில் காத்திருந்து பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரளாக வந்து இறைவனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.