திருமலை லட்டு விற்பனையில் புதிய உச்சம்: 13.52 கோடி லட்டுகள் விற்று சாதனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 12:01
திருமலை ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் விற்பனையில் கடந்த 2025-ம் ஆண்டு புதிய சரித்திரச் சாதனையைப் படைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு லட்டு விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், லட்டு பிரசாதத்திற்கான தேவையும் விண்ணை முட்டியுள்ளது. 2024-ம் ஆண்டில் 12.15 கோடி லட்டுகள் விற்பனையான நிலையில், 2025-ல் இந்த எண்ணிக்கை 13.52 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 1.37 கோடி லட்டுகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 5.13 லட்சம் லட்டுகள்: இந்தச் சாதனைப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, கடந்த 2025, டிசம்பர் 27-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது அந்த ஆண்டின் மிக அதிகபட்ச ஒருநாள் விற்பனையாகப் பதிவாகியுள்ளது.
சுவை மற்றும் தரம்: பக்தர்கள் நெகிழ்ச்சி.. லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் சுவை குறித்து சமீபகாலமாக பக்தர்கள் மிகுந்த திருப்தி தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீவாரி பொட்டு எனப்படும் புனித சமையல் கூடத்தில் சுமார் 700 ஸ்ரீவைஷ்ணவ பிராமணர்கள் இரண்டு ஷிப்டுகளாகப் பிரிந்து, பாரம்பரிய முறைப்படி தூய்மையுடனும் பக்தியுடனும் லட்டுகளைத் தயாரித்து வருகின்றனர்.
தடையற்ற விநியோகம்: வழக்கமான நாட்களில் தினமும் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும் நிலையில், பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் 8 முதல் 10 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளைத் தேவஸ்தானம் செய்துள்ளது. போதிய அளவு லட்டுகள் இருப்பில் வைக்கப்படுவதால், தடையின்றி லட்டு பிரசாதம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.