நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா: பாரம்பரியத்துடன் கொண்டாடும் படுக இன மக்கள்
பதிவு செய்த நாள்
05
ஜன 2026 05:01
குன்னூர்; குன்னூரில், கைகாரு சீமையின் ஹெத்தையம்மன், திருவிழாவின் நடைபயணம் துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழாவை, 48 நாட்கள் கொண்டாடுகின்றனர். மாவட்டத்தில் முக்கிய 4 சீமைகளில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அம்மனின் சக்தியாக கருதப்படும், ஹெத்தைதடியை, விரதத்தில் உள்ள ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். ஹட்டிகள் வழியாக செல்லும் போது, படுக மக்கள் தங்களது பாரம்பரியம் மாறாமல், வெள்ளை உடை அணிந்து, தரையில் விழுந்து வணங்குகின்றனர். மடிமனையில் ஹெத்தைக்காரர்கள் தங்குகின்றனர். ஹெத்தையம்மன் திருவிழாவில், அருள்வாக்கு கூறுதல், காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகளில் படுக இன மக்கள் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர். கோத்தகிரி பேரகணியில், 7ம் தேதி ஹெத்தை திருவிழா கொண்டாப்படுகிறது. இதனால் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜெகதளா காரக்கொரை மடிமனை ஹெத்தையம்மன் கோவிலில் 9ல் குண்டம் திருவிழா, 12ம் தேதி ஜெகதளாவில், ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. குன்னூரில், கைகாரு சீமையில், 19 ஹட்டிகளை சேர்ந்த படுக இன மக்களின் திருவிழா துவங்கியது. இன்று எடப்பள்ளியில் இருந்து காத்துக்குளி மடிமனைக்கு, 24 ஹெத்தைக்காரர்கள், 13 கி.மீ., தூரம் நடை பயணத்தை துவக்கினர். எடப்பள்ளி, இளித்தொரை, பெட்டட்டி உள்ளிட்ட ஹட்டி மக்கள் வரவேற்பு அளிதது, தரையில் விழுந்து வணங்கினர். மடிமனையில் தங்கும் இவர்கள் 12ம் தேதி ஹெத்தை பண்டிகை முடித்து திரும்ப உள்ளனர். இதனால் நீலகிரியில் ஹெத்தை திருவிழா களைகட்டி உள்ளது.
|