பதிவு செய்த நாள்
06
ஜன
2026
04:01
திருப்பரங்குன்றம்: நீதிமன்ற உத்தரவை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தாமல் தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் மனுதாரர் ராம ரவிக்குமார் அவரது வழக்கறிஞர் அருள் சுவாமிநாதன், ஹிந்து மக்கள் கட்சியை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாநிலத் தலைவர் திருமாறன் ஜி, ஹிந்து ராஷ்ட்ர சபா மாநில தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு நேற்று 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். மனுதாரர் ராம ரவிக்குமார் கூறியதாவது: இன்று கிடைத்துள்ள தீர்ப்பு முருக நீதியாக பார்க்கின்றோம். டிச. 1 அன்று தனி நீதிபதி கொடுத்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாமல் மேல் முறையீட்டுக்கு சென்றனர். இரு நபர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைத்து தரப்பு வாதங்களையும் ஏற்று இன்று தனி நீதிபதி கொடுத்த உத்தரவு செல்லும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணை இத்தனை ஆண்டு காலமாக வக்பு, எந்த உரிமையும் கோராமல், தற்போது தங்களது எல்லைக்குள் இருப்பதாக கூறினர். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்று கோயில் நிர்வாகம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி இருந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது. எங்களுக்கு தேவை லைட்டு தான். நோ பைட். ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எங்களுக்குள் அரசு பிணக்கு ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தீபம் ஏற்றாமல் தமிழக அரசு தவறு செய்துள்ளது என அரசாங்கத்திற்கு நீதிமன்றம் சரியான சவுக்கடியை கொடுத்திருக்கிறது.
எங்களது வேண்டுதல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இதற்காக போராடியவர்கள் ஒத்துழைத்தவர்கள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய அரசை கண்டித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட தீப போராளி பூரண சந்திரனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். நீதிபதியை விமரிசித்தவர்கள், சர்வே கல், கிரனைட் கல், சலவைகள், சமணர் ஜோதி என பொய் சொன்னார்கள். மேலும் முருகனுக்கு இரண்டு பொண்டாட்டி இருப்பதைப் போல இரண்டு தீபம் ஏற்ற முடியாது என கூறினர். கோயில் உரிமைக்கு போராட வேண்டிய அறநிலையத்துறை மசூதிக்கு ஆதரவாக பேசினர். என் வீட்டுப் பிள்ளைக்கு கஞ்சி இல்லாத போது ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு பிரியாணி கொடுப்பதை போல கோயில் உண்டியல் பணத்தை எடுத்து தர்காவிற்காக கோயில் நிர்வாகம் வாதாடுகிறது. வன்மையான கண்டனத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம். நல்ல மனிதனுக்கு ஒரு சொல். நல்ல அரசுக்கு ஒரு சூடு. இந்த அரசு இரண்டு சூடு வாங்கி விட்டது. இனி இதை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இந்த தீர்ப்பு முருகநீதி. ஹிந்துக்களுக்கு இவர்கள் அநீதி செய்தார்கள்,. முருகனுக்கான நீதியை நீதிமன்றம் கொடுத்துள்ளது என்றார்.
ராம ரவிக்குமார் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதிகள் இன்று உத்தரவு கொடுத்துள்ளனர். தூணில் தீபம் ஏற்ற தீர்ப்பு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்றப்பட வேண்டும் என நானும், ராம ரவிக்குமாரும் வேண்டிக் கொண்டதன் பேரில் இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு 108 சிதறு தேங்காய் உடைத்துள்ளோம். ஏற்கனவே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தமிழக அரசு பல்வேறு கோணங்களில் திரும்பத் திரும்ப பொய் வாதங்களை நீதிமன்றத்தில் கூறினர். இப் பிரச்னையில் அனைத்து விவாதங்களுக்கும் முருகப்பெருமான் இன்று பதில் கொடுத்துள்ளதாக நாங்கள் நம்புகின்றோம். சட்டம் ஒருபுறம் இருந்தாலும் தர்மம் நிலைக்கும் என்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு மிகச்சிறந்த உதாரணம். 150 ஆண்டுகளுக்குப் பின்பு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோயில் நிர்வாகமே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்கு மாநகர காவல்துறையும் , மாவட்ட கலெக்டரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். நான் மனுதாரரின் வழக்கறிஞராக இருந்தாலும் நான் பிறப்பால் ஒரு ஹிந்து, முருக பக்தர் என்ற அடிப்படையில் இன்று எங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி உள்ளோம். இரு நீதிபதிகளின் உத்தரவை மாநில அரசு ஈகோ பார்க்காமல், அரசியலாக பார்க்காமல் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும். நீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு குட்டு வைத்துள்ளனர். ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தாமல் போனதற்கு காரணம் தமிழக அரசின் அரசியல் தான் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழக அரசு இந்த தீர்ப்பை அரசியலாக்காமல் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்.
ஹிந்து மக்கள் கட்சியை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியதை மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த தீர்ப்பு ஹிந்து மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. நீதி வென்றுள்ளது. அதர்மம் தோற்றுள்ளது. மலை மேல் உள்ள தீபத்தூணை பல்வேறு பெயர்களை கூறி வாதம் செய்தனர். அது தீபத்தூண்தான் என இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயிலுக்கு சொந்தமான தீபத்தூணை தர்க்கா நிர்வாகம் சொந்தம் கொண்டாடுவது சிறுபிள்ளைத்தனமானது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக அரசால்தான் இவ்வளவு பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதால் தான் தீப பிரச்னையில் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். நீதிபதிகள் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். முருகப்பெருமானுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.