உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு தங்க பகவத் கீதை காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2026 01:01
உடுப்பி: டில்லியின் பக்தர் ஒருவர், உடுப்பி கிருஷ்ணருக்கு தங்க பகவத்கீதையை, காணிக்கை செலுத்தினார். ஜனவரி 8ம் தேதியன்று, இந்த புத்தகம் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
உடுப்பி கிருஷ்ணர் மடம் வெளியிட்ட அறிக்கை: உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் மடம், புராதன பிரசித்தி பெற்றதாகும். உள்நாடு மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் உடுப்பி கிருஷ்ணருக்கு பக்தர்கள் உள்ளனர். அவ்வப்போது கோவிலுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். அதே போன்று, டில்லியை சேர்ந்த பக்தர் ஒருவர், தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பகவத்கீதையை காணிக்கை செலுத்தியுள்ளார். இரண்டு கோடி ரூபாய் செலவில், இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்கத்தகடுகளில் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களின், 700 சுலோகங்கள் அழகாக அச்சிடப்பட்டுள்ளன. ஜனவரி 8ம் தேதி, முறைப்படி கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அன்றைய தினம் தங்க ரதத்தில், தங்க பகவத்கீதையை வைத்து, ரத வீதிகளில் ஊர்வலம் நடத்தி கிருஷ்ணர் கோவிலுக்கு கொண்டு வந்து, சமர்ப்பணம் செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள், ஸ்ரீராம ஜென்மபூமி புண்ணிய தல டிரஸ்ட் பொதுச்செயலர் சம்பத் ராய் உட்பட பலர் பங்கேற்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.