பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், ஸ்டிக்கர் வழங்க வேண்டுகோள்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 02:01
மானாமதுரை; மானாமதுரை நான்கு வழிச்சாலை வழியாக பழனி, திருப்பரங்குன்றம், குன்றக்குடி முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், ஸ்டிக்கர் வழங்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் வருகிற பிப்.1ம் தேதி தைப்பூச விழா நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோயில்களுக்கு ராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருடம் தோறும் பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக உள்ளது. தைப்பூசத்தன்று கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்னதாகவே ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வருகின்றனர். ராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம், மதுரை நான்கு வழிச்சாலை வழியாக மேற்கண்ட ஊர்களில் உள்ள முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அதிகாலை மற்றும் இரவு நேரத்திலும் தான் நடைபயணம் சென்று வருகின்றனர். அப்போது நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் வேகமாக வரும் போது பக்தர்கள் கூட்டம், கூட்டமாக நடந்து செல்லும் போது விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முருக பக்தர்களுக்கு போலீசார் ஒளிரும் குச்சிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.