காணும் பொங்கல் விழா ; செஞ்சி கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2026 03:01
செஞ்சி; காணும் பொங்கலுக்கு செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து துறைகள் சார்பில் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை இயற்கை எழிலுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. பழமையான செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய மரபு சின்னமாக கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி அறிவித்தது. இதன் பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக காணும் பொங்கல் அன்று விழுப்புரம், சென்னை, வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் கார், வேன், டிராக்டர்களில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த ஆண்டு உலக பாரம்பரிய மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இவர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு துறைகள் சார்பில் செய்துள்ளனர். செஞ்சி டி.என்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, விஜி, வனஜா மற்றும் 15 சப் இன்ஸ்பெக்டர்கள், 150க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்திய தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் இஸ்மாயில் தலைமையில் கோட்டை ஊழியர்கள், தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர்கள் 20 பேரும், உதவியாளர்கள் 20 பேரும் சுற்றுலா பயணிகளை ஒழுங்கு படுத்த உள்ளனர். கோட்டைக்குள் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் இரும்பு பைப்புகளை கொண்டு தனித் தனி வழிகளை ஏற்படுத்தி உள்ளனர். தீயணைப்பு நிலைய பொருப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 10 பேர் குளம் மற்றும் நீர்நிலைகளின் அருகே பாகப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர் யோகப் பிரியா தலைமையில் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதா நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் அமைக்க உள்ளனர். பேரூராட்சி சார்பில் குடிநீர் வழங்கவும், துப்புரவு பணிகளை செய்ய 50க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செஞ்சி பஸ்நிலையத்தில் இருந்தும், பல்வேறு கிராமங்களில் இருந்தும் நேரடியாக சிறப்பு பஸ்களை இயக்க உள்ளனர்.