ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், தடுப்பு வேலி கம்பியில் குருக்கள் சிக்கி தடுமாறியதால், ரிஷப வாகனத்தில் உலா வந்த உற்சவர் சிலை கீழே விழுந்தது. பிரதோஷத்தையொட்டி நேற்று முன்தினம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் உற்சவரான சுவாமி சந்திரசேகரர், கவுரி அம்மன் எழுந்தருளி, மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் வந்து கொண்டிருந்தனர்.
இந்த ரிஷப வாகனத்தை கோவில் குருக்கள் எட்டு பேர் சுமந்தபடி வந்தனர். நந்தி சிலை மண்டபம் நுழை வுக்கு முன் வந்த போது, பக்தர்கள் செல்லும் தடுப்பு வேலி கம்பியில் ஒரு குருக்கள் சிக்கி, நிலை தடுமாறினார். அப்போது வாகனத்தில் இருந்த உற்சவர் சிலை கீழே விழுந்தது. உடனே, அவர்கள் சிலையை துாக்கி கொண்டு கோவிலுக்குள் சென்றனர். இதைப்பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இக்கோவில் வரலாற்றிலே முதன் முதலாக இச்சிலை கீழே விழுந்துள்ளது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
பக்தர்களிடம் பணம் வசூலிக்கும் நோக்கில் தடுப்பு வேலி அமைத்து, உலா வரும் நாளில் உற்சவர் சிலை விழுந்ததால் கோவிலில் புனிதத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என ஆன்மிகவாதிகள், பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.