திருப்புவனம் வைகையில் கலக்கும் சாக்கடை; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 04:01
திருப்புவனம்; திருப்புவனம் வைகை ஆறு முழுவதும் சாக்கடை, குப்பை, பழைய துணிகள் என நிரம்பியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
ஹிந்துக்கள் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து நீராடி செல்வது வழக்கம். காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் மட்டுமல்லாது ஹிந்துக்கள் அனைவரும் திருப்புவனத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி கிடையாது, வைகை ஆற்றங்கரையில் போதிய இடவசதி இருந்தும் இதுவரை மண்டபம் அமைக்கப்படவில்லை. வெயில், மழை என அனைத்து காலங்களிலும் மரத்தடி நிழலில் தான் பக்தர்கள் திதி, தர்ப்பணம் வழங்க வேண்டியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல வைகை ஆற்றங்கரையில் நீண்ட படித்துறை அமைத்து மண்டபம் கட்டி தர வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போது கானூர் கண்மாய் பாசனத்திற்காக திருப்புவனம் புதூரில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலம் வரை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும், திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்கள் நீராட ஆற்றினுள் பாதுகாப்பாக தடுப்புக்கம்பி அமைத்து நிரந்தரமாக தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும், பெண்கள் உடைமாற்றும் அறை, சுகாதார வளாகம்,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.