பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
துறையூர்: தென் திருப்பதி என்றழைக்கப்படும் துறையூர் பெருமாள்மலையில், 45 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லாததால், சாமி நீராடல், திருமஞ்சனம், மடப்பள்ளி பிரசாதம் தயாரிப்பு, குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய கோவில் நிர்வாகம் முன்வரவில்லையென பக்தர்கள் புகார் கூறுகின்றனர். தென் திருப்பதி என்றழைக்கப்படும் துறையூர் பெருமாள் மலை மீது ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளி ஸேவை சாதிக்கிறார். இங்கு தினமும் ஸ்வாமிக்கு கைங்கரியம் செய்ய, அக்காலத்தில் மழைநீரை மடப்பள்ளியில் சேமித்து வைக்க, பெரிய பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பை முன்னோர்கள் அக்காலத்திலேயே இக்கோவிலில் பயன்படுத்தியதை, இன்றும் மடப்பள்ளியில் காணலாம். பாறைகளுக்கிடையே சுனையென்னும் நீரூற்றிலிருந்து, தண்ணீர் எடுத்து பயன்படுத்தியுள்ளனர். மழை இல்லாததாலும், மலையில் நீரூற்று இருக்கும் இடத்துக்கு செல்ல போதிய வசதிகள் இல்லாததாலும், அடிவாரத்திலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் எடுத்து, குழாய்கள் பதித்து மேலே எடுத்து செல்லப்பட்டது. மலை மீது குழாய்களில் நீர் தடையின்றி செல்ல, பம்பிங் வசதியுடன் கூடிய மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தது. தற்போது மோட்டார் பழுதினாலோ, குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதாலோ, தண்ணீர் விநியோகம் இல்லாமல், கடந்த, 45 நாட்களாக ஸ்வாமிக்கு செய்யப்படும் கைங்கரியங்கள் தடைபட்டுள்ளது. கோவிலுக்கு மேலே செல்லும் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள் கேனில் தண்ணீர் எடுத்துச்சென்று ஸ்வாமி கைங்கரியம் செய்கின்றனர். இதுகுறித்து, பக்தர்கள் துறையூர் சிவன் கோவில் வளாகத்திலுள்ள, இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் சீனிவாசனிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து செயல் அலுவலர் சீனிவாசனிடம் கேட்டபோது, ""குழாய் அடைப்பை பரிசோதிக்க, மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையை வெட்டி, அதன் கீழ் உள்ள குழாய்களை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் கால தாமதமாகிறது, எனக்கூறினார். பத்துநாட்கள் ஆகியும், இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. செயல்அலுவலர் சீனிவாசனின் மெத்தன போக்கால், பெருமாள் கைங்கரிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவ்விஷயத்தில் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்கள் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.