பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவதுர்கா மகாயாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 04:01
பரமக்குடி; பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவதுர்கா மகாயாகம் நடந்தது. கோயிலில் நேற்று முன்தினம் மாலை 4:35 மணிக்கு அனுக்கை, கலச ஸ்தாபனம், கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. பின்னர் நவதுர்கா யாகத்தின் முதல் கால யாகபூஜை துவங்கி இரவு 9:00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.
இன்று காலை 8:00 மணிக்கு சக்தி கணபதி பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், நவ துர்கா ஹோமம், பீஜ மந்திர ஹோமம் நடத்தப்பட்டது. யாக குண்டத்தில் அனைத்து வகையான மூலிகை பொருட்கள், பழங்கள் இடப்பட்டது. இத்துடன் அக்னியில் பட்டு சேலை, மாலை மற்றும் மஞ்சள் தாலி என சமர்ப்பிக்கப்பட்டு மகா பூர்ணாகுதி நடந்தது. தீர்த்த குடங்களை சென்னை காளிகாம்பாள் கோயில் சிவாச்சாரியார் காளிதாஸ் தலைமையில் சுமந்து வலம் வந்தனர். அம்மனுக்கு பால் உள்ளிட்ட அனைத்து வகையான அபிஷேகங்களும் நிறைவடைந்து தீர்த்த அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் முத்தாலபரமேஸ்வரி அம்மன் துர்க்கை அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் செய்தனர்.