வனத்துறை வசமுள்ள யானைகள்: காஞ்சி பீடத்திடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு
பதிவு செய்த நாள்
24
ஜன 2026 11:01
சென்னை: காஞ்சிபுரம் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான மூன்று யானைகளை, வனத்துறை திரும்ப ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் காஞ்சி காம கோடி பீடத்தில் வழிபாட்டு நடைமுறைகளுக்காக, சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய மூன்று யானைகள், சட்டத்துக்கு உட்பட்டு தகுந்த சான்றிதழ் பெற்று வாங்கப்பட்டன. இந்த யானைகளை பராமரித்து வந்த பாகன், 2015ல் இறந்ததால், வனத்துறையிடம் அவை ஒப்படைக்கப்பட்டு, திருச்சி எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில், அவை பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், யானைகளை மீண்டும் தங் களிடம் ஒப்படைக்கக்கோரி, காஞ்சி காமகோடி பீடம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, யானைகளை காஞ்சி காமகோடி பீடத்திடம் ஒரு வாரத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வனத்துறை அளித்த மேல்முறையீடு மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில், ‘யானைகளுக்கு வயதாகிவிட்டன. திருச்சி முகாமில் எட்டு யானைகள் இருந்த நிலையில் ஒரு யானை இறந்துவிட்டதால், தற்போது ஏழு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யானைகளை அனுப்பினால், மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவகாசம் வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பீடத்துக்கு சொந்தமான யானைகளை ஆறு ஆண்டுகள் வனத்துறை வைத்துள்ளது. பீடத்திடம் யானைகளை தர, வனத்துறை மறுக்க முடியாது. யானைகளை உரிய மருத் துவ பரிசோதனைக்கு பின், வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் முடிவில் தலையிட முடியாது என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
|