சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ராமையா நாடார் குடியிருப்பு சுயம்புலிங்க சுவாமி கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவானதை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலை அலங்கார மண்டபத்தில் ஹோம குண்டம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது.
பின்னர் பூஜிக்கப்பட்ட கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு யாத்ரா தானம், கடம் புறப்பாடு உள்ளிட்டவைகள் நடந்தது. சுயம்புலிங்க சுவாமி, பிரம்மசக்தி அம்மன் உள்ளிட்ட பரிபார தெய்வங்களின் கோபுர விமானம் மற்றும் மூலஸ்தானம் உள்ளிட்டவைகளில் புனித நீர் ஊற்றி வருடாபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் விநாயகர், முருகன், சுயம்புலிங்க சுவாமி, பிரம்மசக்தி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை திருநெல்வேலி மாவட்ட உவரி அச்சகர்கள் அப்பர் மூர்த்தி, சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் உள்ளிட்ட குருக்கள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கன்னிராஜபுரம் சுயம்புலிங்க சுவாமி கோயில் அறக்கட்டளை விழா கமிட்டியாளர்கள், கோயில் அறங்காவலர் இன்ஜினியர் ஆனந்தலிங்கம், தலைவர் சுயம்புலிங்கம், செயலாளர் சுந்தரமகாலிங்கம், வெள்ளச்சி வகையறா நற்பணி இயக்க தலைவர் அழகுலிங்கம் உள்ளிட்ட கோயில் உபயதாரர்கள் செய்திருந்தனர். எம்.ஆர்.ஹைடெக் ராமமூர்த்தி, எம்.ஆர். டிரேடர்ஸ் சத்தியமூர்த்தி, இந்தியன் வங்கி பூபதி உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை திரைப்படப் புகழ் நட்சத்திரங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.