பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் ரத சப்தமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2026 02:01
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் சூரிய ஜெயந்தி நாளில் ரதசப்தமி விழா கோலாகலமாக நடந்தது.
ரதசப்தமி நாள் சூரிய பகவானை வழிபடும் முக்கிய விழா. வசந்த காலத்திற்கு பருவம் மாறுவது மற்றும் அறுவடைக்காலம் துவங்குவதை குறிக்கிறது. திருமாலின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் சூரிய பிரபை மற்றும் தேரில் பெருமாள் வீதி வலம் வருகிறார். இதன்படி ஜய, அஜய, விஜய, ஜித்பராண, ஜிதஸ்ம, மனோஜவ, ஜிதக்ரோத எனும் ஏழு குதிரைகள் ஏழு கதிர்கள் பாயும் பாதையை குறிக்கிறது.
இந்நாள் தொடங்கி சூரியன் வட திசையிலிருந்து ஆறு மாதத்திற்கு உலகிற்கு ஒளி தருவார். இதனை நினைவுபடுத்தும் விதமாக எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் புஷ்ப தேரில் எழுந்தருளினார். பின்னர் மாலை வரை வீதி வலம் வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து பல்வேறு பிரசாதங்கள் வழங்கி கொண்டாடினர். பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடி பின் தொடர்ந்தனர்.
* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் ஏகாந்த சேவையில் சூரிய பிரபை வாகனத்தில் கோயில் முன்பு கல் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாலை 4:30 மணிக்கு புறப்பாடாகி முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் ஏற்பாடுகளை செய்தனர்.