அன்னூர்: பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில், நேற்று கொடியேற்றம் நடந்தது.
மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோயிலில், 59 வது ஆண்டு திருத்தேர் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது. வேள்வி பூஜை நடந்தது. காலை 8:15 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீ தேவி பூதேவி சமேதர வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அறங்காவலர்கள் உள்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று (26ம் தேதி) இரவு 8:00 மணிக்கு சிம்மவாகனத்திலும், 27ம் தேதி இரவு அனுமந்த வாகனத்திலும், 28ம் தேதி இரவு கருட வாகனத்திலும், சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.