பதிவு செய்த நாள்
08
ஜன
2013
10:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பொருட்கள் வைப்பு அறை போன்ற இடங்களில் வெடிகுண்டு போலீசார் இல்லாததால், பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள இக்கோயிலில், மத்திய உளவுத்துறை அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. கோயிலுக்குள் அசம்பாவிதம் நடக்காத வகையில், உள்ளூர் போலீஸ் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. இதில், கோபுர வாசலில், தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வருகிறார்களா என கண்காணிக்கும் பணியில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் பொருட்கள் வைப்பு அறையிலும், இவர்களே உள்ளனர். மெட்டல் டோர் டிடெக்டர் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிட்டு அனுமதிக்கின்றனர். "இது, பாதுகாப்பிற்கு உதவாது; வெறும் கண்துடைப்பாகதான் சோதனை நடக்கிறது என்கின்றனர் போலீசார்.
அவர்கள் கூறியதாவது: காலத்திற்கேற்ப, குண்டு வைக்கும் முறையும் நவீனமாகி வருகிறது. லெட்டர் பாம் போன்றவற்றை எல்லாம் இப்போது பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். அதை சோதனையிடும் பயிற்சியை, முறைப்படி வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் கோபுர வாசலில், பக்தர்களை சோதனையிடுவதில்லை. பொருட்கள் வைப்பு அறையிலும் கண்டுகொள்வதில்லை. பொருட்களில் ஏதேனும் வெடிகுண்டு மறைத்து வைத்திருந்து, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பார்கள். இதனால், நாங்கள் ஒருவித அச்சத்துடனே பணியாற்ற வேண்டியுள்ளது. கோயிலுக்குள் மோப்ப நாயைக் கொண்டு பெயரளவில் சோதனையிட்டு திரும்பி விடுகின்றனர். மேலும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பலமொழிகள் தெரியும் என்பதாலேயே, பக்தர்களுக்கு உதவுவதற்காக கோயில் கண்காணிப்பிற்கு நியமிக்கப்பட்டனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால், வெளிமாநில பக்தர்கள் அதிகம் வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரும் அவர்களுடன் மொழி பிரச்னையால் நாங்கள் போராட வேண்டியுள்ளது. இதுவே, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் இருந்தால் பிரச்னையை கோபுர வாசலிலேயே தடுத்துவிட முடியும். உள்ளே அசம்பாவிதங்கள் நிகழாதவாறு தடுக்க முடியும், என்றனர்.