பதிவு செய்த நாள்
08
ஜன
2013
11:01
ஈரோடு: ஈரோட்டில் அனுமன் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராமனின் தீவிர பக்தரான ஆஞ்சனேயர், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்ததால், ஆண்டுதோறும் இத்தினத்தை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுவது வழக்கம். ஈரோடு வ.உ.சி., பார்க்கில் சுயம்பாக எழுந்தருளியிருக்கும் ஆஞ்சனேயர் கோவிலில், 11ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பக்தர்களும் தங்களின் வேண்டுதலின்படி, ஆண்டுதோறும், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து மகாவீர் ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு தலைவர் சிற்றரசன் கூறுகையில், ""அனுமன் ஜெயந்தி விழாவில், வ.உ.சி., பார்க் ஆஞ்சனேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பிரசாதமாக லட்டு வழங்கி வருகிறோம். ஜனவரி, 11ல் நடக்க உள்ள அனுமன் ஜெயந்திக்கு பிரசாதமாக லட்டு வழங்கிட, ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில், இன்று (நேற்று) லட்டு தயாரிக்கும் பணி துவங்கியது. நாளை (இன்று), 50 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டு, ஹனுமன் ஜெயந்தி விழாவின் போது பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும், என்றார்.