திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இருந்து நேற்று உற்சவர் முருகர், வள்ளி – தெய்வானையுடன், எட்டிக்குப்பத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி அடுத்த எட்டிக்குப்பம் கிராமத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை, மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருக பெருமான் வள்ளி – தெய்வானையுடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில் நேற்று காலை, 7:00 மணியளவில், உற்சவர் முருக பெருமான் மலைப்படிகள் வழியாக சரவண பொய்கை என்கிற திருக்குளத்தை வந்தடைந்தார். பின், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, ஊர்வலமாக தரணி வராகபுரம் கிராமம் வழியாக சென்று, மதியம் 1:00 மணிக்கு எட்டிக்குப்பம் பஜனை கோவிலில் எழுந்தருளினார். பின், மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவில் உற்சவர் பெருமான் எட்டிக்குப்பத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் திருத்தணி மலைக்கோவிலை வந்தடைந்தார். முருகர் திருவீதியுலாவை முன்னிட்டு கிராமம் முழுதும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், வீதிகளில் வண்ண கோலங்களிட்டும் முருக பெருமானை வரவேற்றனர். மேலும், பெண்கள் வீடுதோறும், உற்சவருக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.