1,100 மீட்டர் உயர மலையேறி மகா சிவராத்தியில் பக்தர்கள் வழிபாடு
பதிவு செய்த நாள்
16
பிப் 2026 01:02
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பேவநத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டி, கடல் மட்டத்தில் இருந்து, 1,100 மீட்டர் உயர மலையில், சிவா நஞ்சுண்டேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. மலை மீது ஏற சிறிது துாரம் மட்டுமே படிக்கட்டுகள் உள்ளன. அதன் பின் செங்குத்தாக உள்ள பாறையின் மீது, இரும்பு குழாய்களை பிடித்து கொண்டு தான் பக்தர்கள் ஏற வேண்டும். இக்கோவிலில் நேற்று மகா சிவராத்திரியையொட்டி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி சுற்றுப்புற கிராமத்தினர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கொழுத்தும் வெயிலிலும், காலில் செருப்பு கூட அணியாமல், நேற்று காலை முதல், மலை மீதேறி, சுவாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், ஓசூர் மலைமீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முழுவதும் நடை சாத்தப்படவில்லை. இரவில் நான்கு கால பூஜைகள் மற்றும் சிறப்பு ருத்ராபிஷேகம் நடந்தது. மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
|