காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2026 05:02
காளஹஸ்தி; காளஹஸ்தி சிவன் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10 - ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக நடந்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி விழாவின் 11-ஆவது நாளில் காலை 10 மணி முதல் கேடிக வாகனங்களில் சோமாஸ்கந்த மூர்த்தி ஞானப் பிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தேர் வீதியில் உள்ள வாகன மண்டபத்தில் கேடிகங்களில் அமரச் செய்து நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து சன்னதி வீதியில் உள்ள வசந்த மண்டபத்தில் கோயில் அதிகாரிகள் மற்றும் வேதப் பண்டிதர்கள் வசந்த உற்சவத்தை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
முன்னதாக வசந்த மண்டபத்தில் கணபதி பூஜை புன்னியாவசனம் செய்ததை தொடர்ந்து சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி எடுத்தனர். ஆதி தம்பதியினரின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கோயில் வேதப் பண்டிதர்கள் செய்ததை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.சீனிவாசுலு உட்பட திரளான பக்தர்கள் இந்த சிறப்பு உற்சவமான வசந்தோற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.