சென்னை: திருவள்ளுவர் கோவில் மஹா கும்பாபிஷேகம், இன்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, திருக்குறள் முழக்கமிட்டு பரவசமடைந்தனர்.
சென்னை, திருவொற்றியூர், ஈசாணி மூர்த்தி கோவில் தெருவில், திருவள்ளுவருக்கு கோவில் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன், முழுதும் இடிந்தது. இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத் துறை, ஒன்றரை ஆண்டுக்கு முன் 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, புதிதாக கோவில் கட்டும் பணியை துவக்கியது. திருவள்ளுவருக்கு தனி சன்னிதி, கோபுரம் உள்ளிட்ட மந்தகதியில் நடந்துவந்தன. இரு மாதங்களுக்கு முன், கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தற்போது அனைத்து பணிகளும் முடிந்ததை அடுத்து, 19ம் தேதி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை, விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ எனும் திருக்குறளை உச்சரித்து, பரவசமடைந்தனர். திருவள்ளுவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.