பல்லடத்தை அடுத்த, செஞ்சேரிமலையில், மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, பக்தர்கள் பங்களிப்புடன் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் அர்ப்பணிக்கப்பட்டது. நேற்று முன்தினம், அடிவாரத்தில் இருந்த தங்கத்தேர், மலை மேல் அமைந்துள்ள கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து, தங்கத்தேர் கிரிவல விழா இன்று நடந்தது. செஞ்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக, காலை, 6.30 மணிக்கு மங்கள இசை, பூர்வாங்கம் மற்றும் ஓம பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ரத பிரதிஷ்ட்டை நடந்தது. பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களால், ரத்ததுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராக மந்திரகிரி வேலாயுத சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளினார். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடிக்க, கிரிவலப் பாதை வழியாக ரதம் கோவிலை வந்தடைந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.