ஸ்ரீரங்கம் அடிமனை அரங்கனுக்கே சொந்தம் 19 ஆண்டு வழக்கில் திருச்சி கோர்ட் தீர்ப்பு
பதிவு செய்த நாள்
21
பிப் 2026 01:02
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அடிமனை பிரச்னையில், ‘அடிமனை அரங்கனுக்கே சொந்தம்; அந்த இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும்’ என, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், பல தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருக்கும், 41 பேர், தங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என, 2007ல் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர். 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நீதிபதி சுவாமிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில், ‘ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனைகள், அரங்கனுக்கே சொந்தமானது. அதில் வசிப்போர் அடிமனைக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அந்த அடிமனைகளில் வீடு கட்டியோர், 3 மாதங்களில் வீடுகளை காலி செய்து, இடமாக மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும். ‘இந்த இடங்களுக்கு கடந்த காலங்களில் வழங்கிய பட்டாக்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என, கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை அரை நுாற்றாண்டுக்கு மேலாக நடந்து வரும் பிரச்னை. அதில், குறிப்பிட்ட சிலர் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பு, ஸ்ரீரங்கம் நான்கு வீதிகளில் கோவில் நிலத்தில் வசிப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து, ஸ்ரீரங்கம் நகர் நலச்சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது:ஸ்ரீரங்கம் கோவில் நிலம், 329 ஏக்கர் பரப்பு உள்ளது. இதில், 5,000 பேர் வீடு கட்டி, பல தலைமுறையாக வசிக்கின்றனர். கடந்த, 1963ல் இனாம் தார் நிலம் ஒழிப்பு சட்டம் வந்த பின், 1969ல் தமிழக அரசால் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதன் பின், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், அடிமனை, கோவிலுக்கும், கட்டடம் கட்டியோருக்கும் சொந்தம் என, தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு தான் இன்றும் உள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில் தான், 41 பேர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இப்பிரச்னையில் மாவட்டத்தின் இரு அமைச்சர்களும், தமிழக அரசும் தலையிட்டால் தான், சுமூக தீர்வு கிடைக்கும். இல்லாவிட்டால், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
|