பதிவு செய்த நாள்
11
ஜன
2013
11:01
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில் தெப்பத் திருவிழா வரும் 18ம் தேதி கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்குகிறது. சிவசைலத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள புகழ்பெற்ற சிவஸ்தலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில். ஆழ்வார்குறிச்சி நகர வியாபாரிகள் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு 19வது தெப்பத் திருவிழா வரும் 18ம் தேதி காலை 9.45மணி முதல் 10.30 மணிக்குள் கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து வரும் 26ம் தேதி இரவு சிவசைலத்தில் இருந்து சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் தெப்பத்திருக்குள விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். 27ம்தேதி காலை விளா பூஜை, அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் விநாயகர் கோயிலில் இருந்து தர்மபுர ஆதீன மடத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. பின் உச்சிகால அபிஷேகமும், விசேஷ அலங்காரத்துடன் கூடிய பூஜையும் நடக்கிறது. மாலை சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. இரவு 8.30மணிக்கு சுவாமி, அம்பாள் தர்மபுர ஆதீன மடத்திலிருந்து தெப்பத்திற்கு எழுந்தருளுகின்றனர்.
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி,அம்பாள் 11 சுற்று வலம் வருதலும், வாண வேடிக்கையுடன் திருக்குளம் வீதி வரும்போது பெரியதளவாய் மாடசாமிக்கு காட்சியளித்தல் வைபவமும் நடக்கிறது. விழாவில் கட்டியம், வேதபாராயணம், தேவார பன்னிசை ஆகியன நடக்கிறது. 28ம்தேதி சுவாமி, அம்பாள் அதிகாலையில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆழ்வார்குறிச்சி நகர வீதியுலா நடக்கிறது. பிறகு சுவாமி, அம்பாளுக்கு கோயிலில் சிவாச்சாரியார்கள் இரட்டை சோடச தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் ருத்ர ஹோமம், ருத்ர ஏகாதசி, விசேஷ அபிஷேகம், சிறப்பு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு மேல் தர்மபுர ஆதீனம் மடத்திலிருந்து சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளலும் கோயில் சேர்ந்தபின் அபிஷேக தீபாராதனை நடக்கிறது. தெப்பத்திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளாக 26ம் தேதி இரவு கல்லிடைக்குறிச்சி ஆறுமுகம் சகோதரர்களின் செண்டை மேள கச்சேரியும்,நெல்லை கணேஷ் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. தெப்பத் திருநாளில் மாலை 6 மணிக்கு முக்கூடல் ஓ.கே.சி.என். வெங்கடேஷ் குழுவினரின் கிளாரினெட் கச்சேரி நடக்கிறது. இரவு பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பத்து,பிளஸ் 2 வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்படுகிறது. நெல்லை பிரபாகரன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டி நிரந்தர தலைவர் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் அஜித், செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் வியாபாரிகள் சங்கத்தினர், தெப்ப உற்சவ கமிட்டியினர், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.