பதிவு செய்த நாள்
11
ஜன
2013
11:01
விழாக்கோலம் பூண்டது சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமிக்கு இன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம், மற்றும் கழுத்தளவு நிறையும் அளவிற்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகம் ஆகியன நடக்கிறது. தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்களை கொண்டவர் சுசீந்திரம் ஆஞ்சநேயர். ஒரு தொண்டன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துகாட்டிய ஸ்ரீராமதாசன் ஆஞ்சநேயருக்கு இன்று ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டுது. இதை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயர் சிலைக்கு இரண்டாயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் தேன், களபம், சந்தனம், குங்குமம், வாசனை திரவியங்கள் என 16 வகையான பொருட்களால் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை தொடர்ந்து அபிஷேகம் நடக்கிறது. மாலை கிரேந்தி, வாடாமல்லி தவிர அனைத்துவித நறுமண மலர்களால் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அலங்கார மண்டபத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள மலர்களால் சுவாமியின் கழுத்தளவு வரும் அளவிற்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடக்கிறது. சுவாமியை எல்லா பக்தர்களும் வணங்க வசதியாக வரிசையாக நின்று தரிசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கோயில் வரும் எல்லா பக்தர்களுக்கும் பஞ்சாமிர்தம் மற்றும் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சுசீந்திரம் ஜங்ஷனில் இருந்து கோயில்வரை பக்தர்கள் வந்து செல்லும் விதத்தில் தனி பாதையும், நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் வரும் வாகனங்களுக்கு ஆஸ்ராமம் அஞ்சனம் எழுதியகண்டன் சாஸ்தா, கோயில் எதிர்புறம் கார்பார்க்கிங் வசதியும் அக்கரை மற்றும் நங்கை நகரில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள், காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுசீந்திரம் பஞ்., நிர்வாகம் சார்பில் குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
விரதமிருக்கும் பக்தர்கள்: ஈரோடு, கடலூர் பகுதியை சேர்ந்த 40க்கு மேற்பட்ட பக்தர்கள் ஆண்டு தோறும் 41 நாட்கள் விரதம் இருந்து ஆஞ்சநேய ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து சுவாமியை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு நேற்று மாலை சுசீந்திரம் வந்த இவர்கள் இன்று மொட்டையடித்து சுவாமியை தரிசிக்கின்றனர்.