பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.தமிழகத்தல் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான சுசீந்திரம் கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நெற்று காலை 6 மணிக்கு பால் அபிஷேகத்துடன் துவங்கியது. சுவாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், தயிர், நெய், குங்குமம், சந்தனம், பஞ்சாமிர்தம், களபம், கரும்பு சாறு, மாதுளம் சாறு உட்பட 16 வகை பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்தை காண வடக்கு பிரகாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமியின் எதிரே உள்ள ராமபிரானின் ஆலயம் வரை பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.அபிஷேகத்தின் போது "ஜெய் ஸ்ரீராம், "ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா என பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர். பகல் 12 மணிக்கு வடைமாலை, எலுமிச்சை மாலை, மற்றும் வெண்ணை காப்புடன் அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலையில் அலங்கார கோலத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. பலவித வண்ண மலர்களான ரோஜா, மல்லிகை, பிச்சி, அரளி, தெற்றி, செம்பருத்தி, துளசி உள்ளிட்ட வாசனை மலர்களால் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. அத்துடன் ஸ்ரீராம ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.காலையில் அபிஷேகம் மாலையில் புஷ்பாபிஷேகம் என கோயில் முழுவதும் வாசனை திரவியங்கள் மற்றும் பூக்களின் வாசனை பக்தர்களை பரவசப்படுத்தியது. எங்கிருந்து பார்த்தாலும் ஆஜானுபாகுவான தோற்றமுள்ள ஆஞ்சநேய சுவாமியின் கம்பீர தோற்றத்தை பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய முடிந்தது.சுவாமியன் கழுத்தளவிற்கு நடந்த புஷ்பாபிஷேகத்தின் நிறைவில் இரவு 10 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. கோயிலின் கிழக்குவாசல் வழியாக கோயிலுக்குள் வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து அம்மன் தேர் அருகில் உள்ள வாசல் வழியாக திருப்பி விடப்பட்டனர். இதனால் நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
தெப்பக்குளம் திறப்பு: காலை 6 மணிக்கு 45 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கோயில் தெப்பக்குளத்தை தமிழக வனத்துறை அசுமைச்சர் பச்சைமால் திறந்து வைத்தார். தொடர்ந்து ஆஞ்சநேயரின் அபிஷேக நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். காலை 10 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், 12 மணிக்கு நாகர்கோவில் டி.எஸ்.பி., ரத்தினவேல், பாஸ்கரன், பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் பட்டாளமே கலந்துகொண்டு வீரரான ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். காலை முதல் இரவு வரை கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் பஞ்சாமிர்தம் மற்றும் லட்டு வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை தாணுமாலயன் சுவாமி கலையரங்கம் மற்றும் எஸ்.எம்.எஸ்.எம்., மேல்நிலைப்பள்ளியில் இடைவிடாமல் அன்னதானம் நடந்தது. அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்துகழக துணை மேலாளர் முத்துகிருஷ்ணன், கிளை மேலாளர் ராஜ்கணேஷ், கன்னியாகுமரி கிளை மேலாளர் அழகேசன் ஆகியோர் தலைமையில் நாகர்கோவிலில் இருந்தும் கன்னியாகுமரியில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசு ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், கோயில் மேலாளர் ஆறுமுக நயினார்பிள்ளை, கணக்கர் கண்ணன் மற்றும் ஸ்ரீராம ஆஞ்சநேய பக்தர்கள் டிரஸ்டியினர் செய்திருந்தனர்.