பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
தென்காசி: தென்காசி கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி சன்னிதி சுற்றுப் பிரகாரத்தில் உள்ள அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர். பொருந்தி நின்ற பெருமாள் கோயில் மற்றும் விண்ணகரப்பெருமாள் கோயிலில் அனுமனுக்கு நறுமணப் பெருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
சுபிட்ச வழித் துணை ஆஞ்சநேயர்: குத்துக்கல்வலசை அண்ணாநகர் சுபிட்ச வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் துவங்கியது. ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், வெண்ணெய், நெய், சந்தனம், குங்குமம், பன்னீர், அன்னம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன காப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.நவக்கிரக ஹோமம், நவசந்தி ஹோமம், ஸ்ரீராம அஷ்டோத்திர சகஸ்ர நாம ஹோமம், ஆஞ்சநேய ஹோமம் நடந்தது. மதியம் சிறப்பு பூஜை வழிபாடு, மாலையில் சகஸ்ர நாம ஜெபம், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் காசிவிசுவநாத சுவாமிகள் மற்றும் ஆஞ்சநேய பக்தர்கள் செய்திருந்தனர்.இலஞ்சி குன்னக்குடி லட்சுமி நாராயணா ஜெய ஆஞ்சநேயர் கோயில், செங்கோட்டை பெருமாள் கோயில், கீழப்புலியூர் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.