பதிவு செய்த நாள்
15
ஜன
2013
10:01
தேனி: தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணை நீரால் இரு போகமும் நெல் சாகுபடி நடக்கிறது. அணையை கட்டிய ஆங்கிலேயே பொறியாளர் பென்னிகுக்கை, தேனி மாவட்ட மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுக், மற்றும் அவரது குழந்தைகள் பெயரை சூட்டி தங்கள் நன்றி கடனை செலுத்துகின்றனர். பென்னிகுக் 1841 ம் ஆண்டு ஜனவரி 15ல் பிறந்தார்.இவரது பிறந்த நாளும் பொங்கலும் ஒன்றாக வருவது கூடுதல் பிளஸ் பாயின்ட். எனவே,தேனி அருகே உள்ள பாலார்பட்டி கிராம மக்கள், தைத் திருநாளில் பென்னிகுக்கிற்கு பொங்கல் வைத்து, அவரை வணங்கி ஆண்டுதோறும் நன்றி செலுத்தி வருகின்றனர். நேற்று காலை பாலார்பட்டி கிராம மக்கள் அனைவரும், அங்குள்ள மேற்கு பஸ் ஸ்டாபில் இருந்து, ஊர்வலமாக பாலார்பட்டியில் உள்ள பென்னிகுக் நினைவு மண்டபத்திற்கு வந்தனர்.
அங்கு பென்னிகுக் உருவப் படம் முன், 15 நாட்கள் விரதம் இருந்த 108 பெண்கள், 108 பொங்கல் பானையில் பொங்கல் வைத்தனர். அதன் பிறகு, பென்னிகுக் உருவ படத்திற்கு, மாலை அணிவித்து, நெற்கதிர்கள், பொங்கல் படைத்து, தேங்காய் உடைத்து வணங்கினர். தொடர்ந்து, நாளை(ஜன.,15) அவரது பிறந்த நாளை யொட்டி கேக் வெட்டினர். பின்னர் கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கினர். கிராமத்தை சேர்ந்த ஜோதி, லீலாவதி, ரமா கூறியதாவது: பென்னிகுக் இந்த அணையை கட்டவில்லை, என்றால் இந்த பகுதி பாலைவனமாகத் தான் இருந்திருக்கும். அவரால் நாங்கள் தலைமுறை, தலைமுறையாக வளமுடன் வாழ்ந்து வருகிறோம். எனவே அவர்தான் நாங்கள் வணங்கும் மனித தெய்வம். எனவே கடந்த 14 ஆண்டுகளாக பென்னிகுக்கிற்குபொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். இதற்காக பொங்கல் வைக்கும், 108 பெண்களும் 15 நாட்கள் விரதம் இருந்து பொங்கல் வைக்கின்றனர். அனைத்து சமுதாய மக்களும் இந்த விழாவில் பங்கேற்பர். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பென்னிகுக் படத்திற்கு மாலை அணிவித்து, சந்தனம் வைத்து வழிபடுவர், என்றார்.