பதிவு செய்த நாள்
15
ஜன
2013
10:01
தஞ்சாவூர்: பெரியகோவிலிலுள்ள நந்தியம்பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் கட்டிய பெரியகோவில், இன்றைக்கும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. பெரியகோவில், பெரியநந்தி, மூலவரான பிரகதீஸ்வரர் பெரிய சிவலிங்கம் கோலம் என, பிரமாண்டமாய் காட்சியளிப்பது கூடுதல் சிறப்பாகும். கோவில் நுழைவாயில்களை தாண்டி, நுழைந்தவுடன் முகப்பில் பக்தர்களுக்கு பிரமாண்டமாக நந்தியம்பெருமான் காட்சியளிக்கிறார்.
பெரியகோவிலில் ஆண்டுதோறும் ராஜராஜன் பிறந்தநாளில் சதயவிழா நடத்தப்படுவது போலவே, நந்தியம்பெருமானுக்கு குறித்த தினத்தில், மகர சங்கராந்தி பெருவிழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டு மகர சங்கராந்தி பெருவிழா நேற்று நடந்தது. இதில், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, நந்தியம்பெருமானை, பக்தி பெருக்குடன் வணங்கி, வழிபட்டனர். இதனால் பெரியகோவில் நேற்று பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. இதைத்தொடர்ந்து, மாட்டுப்பொங்கல் தினமான இன்று நந்திகேஸ்வரருக்கு பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, சோடச உபசாரத்துடன் மஹா தீபாராதனையும் நடக்கிறது. பின்னர், 108 பசு மாடுகளுக்கு கோ பூஜையை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர். ஏற்பாட்டை தஞ்சை இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர்கள் அசோகன், குணசேகரன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.