*உலகம் முழுவதும் நம்முடைய அனுபவத்திற்குரியதாகும். அதனால், ஒன்றையும் வேண்டி நிற்காதீர்கள். வேண்டுதல் என்பது நம்முடைய பலவீனமாகும். எதிர்பார்ப்பு வைக்கும்போது நீங்கள் பிச்சைக்காரர்களாகி விடுவீர்கள். உண்மையில் நீங்கள் அனைவரும் ராஜாவீட்டுப் பிள்ளைகள். *யாரையும் அடித்து விடுவது எளிய செயல். ஆனால், எழும்கையைத் தாழ்த்தி அமைதி காப்பதோ மிக கடினம். *பலவந்தமாகச் செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகளால் பலன் கிடைப்பதில்லை. நீ தீயவன் என்று ஒருவனைச் சொல்லித் திருத்த முயற்சிப்பதை விட, நீ நல்லவன் தான்! ஆனால், இன்னும் நல்லவனாக ஆகவேண்டும்! என்று சொல்வது நல்லது. *அன்பு ஒருபோதும் குறை கூறுவதில்லை. பேராசை உணர்வால் தான் ஒருவரைக் குறை சொல்லத் துணிகிறோம். *உள்ளங்களை எப்போதும் திறந்து வையுங்கள். பிரபஞ்சத்தில் உள்ள நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களை வந்தடையட்டும். *ஒரு உயிர் பெரியது என்றும், இன்னொன்று சிறியது என்றும் எப்படிக் கூற முடியும்? எறும்புக்கும், தேவதூதனுக்கும் இடையே கூட அணுவளவும் வேற்றுமை பாராட்ட இடமில்லை. *எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. எல்லா மனிதர்களிடமும் நட்பு பாராட்டு. எல்லாப் பூக்களிலும் தேன் நிறைந்திருக்கிறது. எல்லாரிடமும் நல்லது சகோதரரே நல்லது என்று சொல். ஆனால், உனது சொந்த நெறியை உறுதியாகப் பற்றிக் கொண்டிரு. *இந்த உலகம் பெரிய உடற்பயிற்சி சாலை. நம்மை வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்வதற்காகவே நாம் இங்கு வந்திருக்கிறோம். *இன்பமே மனிதனுடைய நோக்கமாக இருக்கிறது என்பது சரியல்ல. எத்தனையோ பேர் துன்பத்தைத் தேட வும் உலகில் பிறப்பெடுக்கிறார்கள். *பிறருக்கு செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனை எதிர்பார்க்கும்வரை மனிதனிடம் உண்மையான அன்பு உண்டாகாது. *உழைப்பே வடிவாகத் திகழும், சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடி வருகிறாள். *உலகிற்கு நன்மை செய்வதே உங்களின் நோக்கமாகட்டும். பதவி, பட்டம், புகழ் என்று தேடி அலையாதீர்கள். *உறங்கிக் கொண்டிருக்க இது நேரம் அல்ல. அனைவரும் ஒன்றுபடுங்கள். பாடுபட்டு உழைத்து முன்னேறுங்கள். *பணியில் ஈடுபடும் போது எப்போதும் இதை நினைவில் கொள்ளுங்கள். அமைதி, மவுனம், ஒழுக்கம் இவற்றில் கருத்து செலுத்தியபடி பணியாற்றுங்கள். *அடக்கப்படாத மனம் நம்மை கீழ்நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால், அடக்கப்பட்ட மனமோ நமக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும். *அற்பமான எந்த விஷயத்தையும் நாடுவது கூடாது. அதை மனதால் எண்ணுவதோ, கைகளால் தீண்டுவதோ கூடாது. *இயற்கையை எதிர்த்துப் போராடுங்கள். அந்த ஓயாத போரே மனித முன்னேற்றத்தின் படிக்கட்டுகள். *வாழ்வில் பெரும் தியாகம் செய்தவர்களால் மட்டுமே பெரிய செயல்களைச் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். -சுவாமி விவேகானந்தர்