நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் பக்தர்கள் புரவி எடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2026 10:04
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதன் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. தேவகோட்டை பகுதியில் மண் வேலை செய்யும் மக்கள் நூற்றுக்கணக்கில் குதிரை, மாடு பொம்மைகளை செய்தனர். அப்பகுதியில் உள்ள மகமாயி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து குதிரைகளுக்கும் பூஜை செய்து அங்கிருந்து தேவகோட்டை இறகுசேரி, நல்லாங்குடி உட்பட கிராமத்தினர் நேர்த்திக்கடனாக மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் ( குதிரைகள்) , மாடுகளை பக்தர்கள் தோள்களில் சுமந்து கொண்டு நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயிலை அடைந்தனர் புரவிகளை சுவாமி சன்னதி முன் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் விவசாய பக்தர்கள் தங்கள் வயல்களில் இவ்வாண்டு விளைந்த நெல்லில் ஓலை பெட்டிகளில் எடுத்து மண் குதிரை காலடியில் கொட்டி வணங்கினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.