நாமக்கல் மாவட்டம், சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் அம்மனுக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடந்தது. அதை தொடர்ந்து, பிரசித்தி பெற்ற சாட்டையடி திருவிழா நடந்தது. இதில், கோவில் பூசாரிகள் கண்ணன், தமிழ்செல்வன் ஆகியோர், கோவில் முன் சாட்டையுடன் வந்து நின்றனர். அவர்களிடம், ஒரு வயது குழந்தை முதல், 80 வயது மூதாட்டி வரை திரளானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாட்டையடி வாங்கி சென்றனர். பூசாரியிடம் சாட்டையடி வாங்கினால், ‘பில்லி, சூனியம் உள்ளிட்ட தீய சக்திகள் அண்டாது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்’ என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று, தீமிதி திருவிழா நடக்கிறது. இதற்காக கோவில் முன் குண்டம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.