பதிவு செய்த நாள்
16
ஜன
2013
12:01
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலமான இங்கு மார்க்கண்டேயருக்காக சிவன் எமனை சம்ஹாரம் செய்தார். இதனால் இங்கு அதிக அளவில் 60, 70, 80 வயது பூர்த்தியான தம்பதிகள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். இதனால் அவர்களது வாழ்வில் எம பயம் இருக்காது என்பது ஐதீகம்.
இதுபோன்று சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளில் அபிராமி என்ற கோயில் பெண் யானைக்கு கஜ பூஜை செய்வது வழக்கம். மிகப்பிரபலமான இந்த யானை 4 வயதில் இந்த கோயிலுக்கு வந்தது. தற்போது அதற்கு வயது 26. இந்த 22 ஆண்டுகளில் இதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள். உண்டு. அந்த அளவுக்கு இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். இந்த யானை சில நாட்களுக்கு முன்பு அரசு உத்தரவின்படி யானை முகாமுக்கு சென்று மூன்று நாட்களுக்கு முன்பு தான் திரும்பி வந்தது. வந்ததிலிருந்து இதன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சரியான அளவில் சாப்பாடு சாப்பிடாமல், உடல் மெலிந்து எடை குறைந்து விட்டது. இதற்கு அல்சர் இருப்பதாக அறிந்த டாக்டர்கள் தற்போது ஊசி மூலம் மருந்து, மற்றும் டிரிப்ஸ் ஏற்றி வருகின்றனர். இந்த யானையால் தற்போது கோயிலில் நடக்கும் விழா மற்றும் கஜ பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த கவலை தெரிவித்துடன், அபிராமி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றனர்.